புகைப்பவர்களை கொரோனாவுக்கு மிகவும் பிடிக்குமாம்

29.09.2021 16:10:23

புகை பிடிக்காதவர்களுடன் ஒப்பிடுகையில், புகை பிடிப்பவர்களுக்கு கோவிட் பாதிப்பு ஏற்படும் போது, மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய தேவை 80 சதவீதம் அதிகரிப்பதாகவும், இவர்கள் உயிரிழக்கவும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

சீனாவில் கோவிட் வைரஸ் பெருந்தொற்று கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் கண்டறியப்பட்டது. தற்போது வரை 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகையே உலுக்கி வருகிறது. இந்த பெருந்தொற்றை ஏற்படுத்திய கோவிட் வைரஸ் குறித்து உலகெங்கும் தொடர்ந்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், பிரிஸ்டல் பல்கலைக்கழகம், நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் (கிளிப்ட்) ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அதில் தெரிவித்து உள்ளதாவது:

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் ஆய்வு நடத்தப்பட்டது. 4 லட்சத்து, 21 ஆயிரத்து, 469 பேரை ஆராய்ந்ததில் புகை பிடிப்பதற்கும், கோவிட் பாதிப்பு தீவிரம் அடைவதற்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. புகை பிடிக்காதவர்களுடன் ஒப்பிடுகையில், புகை பிடிப்பவர்களுக்கு கோவிட் பாதிப்பு ஏற்படும் போது, மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய தேவை 80 சதவீதம் அதிகரிக்கிறது. இவர்கள் உயிரிழக்கவும் வாய்ப்பு உள்ளது.

புகை பிடித்தால் இதய நோய், புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவது போல, கோவிட் வைரஸ் பாதிப்பும் தீவிரமாக தாக்க வாய்ப்பு உள்ளது; உயிரிழப்பையும் ஏற்படுத்துகிறது. இதனால் புகை பிடிப்பதை கைவிட இது ஏற்ற தருணமாக இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.