இடி, மின்னல் தாக்கி 16 பேர் பலி

05.08.2021 18:14:27

வங்கதேசத்தில், மின்னல் தாக்கி, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 16 பேர் பரிதாபமாக பலியாயினர்.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில், ஒரு வாரத்திற்கும் மேலாக கடும் மழை பெய்து வருகிறது. இதுவரை மழைக்கு 20 பேர் பலியாகியுள்ளனர்.இந்நிலையில், ஷிப்கன்ஜ் நகர் அருகேயுள்ள ஆற்றில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சிலர் படகில் சென்றுஉள்ளனர்.

வழியில் கன மழை, இடி, மின்னல் காரணமாக, படகை கரையோரம் நிறுத்திவிட்டு, அருகில் இருந்த கட்டடத்திற்குள் நுழையச் சென்றனர்.அப்போது, எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து தோன்றிய பயங்கர மின்னல்கள் தாக்கி 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், அதிர்ஷ்டவசமாக மாப்பிள்ளை சிறிய காயத்துடன் உயிர் தப்பினார். மணப்பெண் தனியிடத்தில் இருந்ததால், அவரும் உயிர் தப்பினார்.

இந்த சம்பவம், வங்கதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.அங்கு, 2016ல், ஒரே நாளில் 82 பேர் உட்பட 200க்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்கி பலியாயினர்.வங்க தேசத்தில், காடுகள் அழிக்கப்படுவதால், மின்னல் தாக்குதலில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது.இதையடுத்து, வங்கதேச அரசு, ஆயிரக்கணக்கான பனை மரங்களை நடும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.