அமெரிக்க தேசிய உளவுத்துறையில் இருந்து துளசி கப்பார்ட் விலகல்!

23.05.2026 11:01:46

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தேசிய உளவு நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக துளசி கப்பார்ட் அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் தேசிய உளவுத்துறை பணிப்பாளராக (Director of National Intelligence - DNI) பணியாற்றி வந்த துளசி கப்பார்ட் (Tulsi Gabbard) தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் (X) தளத்தில் துளசி கப்பார்ட் வெளியிட்டுள்ள பதவி விலகல் கடிதத்தில், அவருடைய கணவரின் உடல்நிலை குறிப்பிட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.

அதில், தனது கணவருக்குக் கண்டறியப்பட்டுள்ள ஒரு அரிய வகை எலும்புப் புற்றுநோய் பாதிப்பு காரணமாக, இந்த இக்கட்டான சூழலில் அவருடன் இருக்க வேண்டிய கடமை தனக்கு இருப்பதால், பணிச்சுமை மிகுந்த இந்த பதவியில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டுள்ளார்.

துளசி கப்பார்ட் விலகல் எதிர்வரும் ஜூன் 30 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவருக்கு மாற்றாக முதன்மை துணை பணிப்பாளர் ஆரோன் லுகாஸ் (Aaron Lukas) தற்காலிக பணிப்பாளராக செயல்படுவார் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த பதவியை மிகச் சிறப்பாக வகித்ததாக துளசி கப்பார்டிற்கு ட்ரம்ப் முன்னர் பாராட்டு தெரிவித்து இருந்தார்.

இருப்பினும் ஈரான் மீதான அணுகுமுறையில் டிரம்புடன் ஏற்பட்ட கொள்கை ரீதியான கருத்து வேறுபாடுகள் துளசி கப்பார்ட்-க்கு ஏற்பட்டதாகவும், இதனால் துளசி கப்பார்ட் வெள்ளை மாளிகையால் பதவியிலிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.