அரசியல் தீர்வு விவகாரத்தில் மாற்றம்

03.08.2023 11:00:19

தமிழ் மக்களுக்கு நான் சொல்லக்கூடியது எல்லாம் “பொறுமையாக இருங்கள் - அரசியல் தீர்வு விவகாரத்தில் மாற்றம் ஏற்படும்" என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணத்தின் பின்னர் நடத்திய சர்வகட்சி கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்களின் அடிப்படையிலும், அரசியல் தீர்வு விவகாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலைமை தொடர்பிலும், அதில் மாற்றம் தேவை என்ற அடிப்படையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகார செயலாளர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஆகியோருக்கு தான் எழுதிய கடிதம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்தக் கடிதம் நேற்று(2) அவர்களிடம் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரக அதிகாரிகள் தன்னிடம் உறுதிப்படுத்தினர் என சம்பந்தன் கூறியுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே நேற்று முன்தினம்(1) சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்தச் சந்திப்பின்போதே இரா. சம்பந்தனால் இந்திய தூதரிடம் இக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
அரசியல் தீர்வு ஸ்தம்பிதம்

அண்மையில் அனுப்பப்பட்ட கடிதம் - மோடிக்கு நீண்ட கடிதம் அனுப்பினார் சம்பந்தன்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியல் தீர்வு விவகாரத்தில் ஸ்தம்பித நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 36 ஆண்டுகள் கடந்துள்ளது. அதில் உள்ள 13 ஆவது திருத்தம் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது.

இந்திய - இலங்கை ஒப்பந்தமும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதேவேளை 13ஆவது திருத்தத்தில் உள்ள பரிந்துரைகளும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

அரசியல் தீர்வு ஸ்தம்பிதம் அடைந்துள்ள நிலையில், அதில் கட்டாயம் மாற்றம் தேவை என வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் பிரதியிட்டுள்ளேன்” - என்றார்.