வேலை வாய்ப்பில்லாத காரணமாகவே போதைப் பொருள் பாவனை

14.10.2021 04:19:10

வடக்கில் வேலையில்லாப் பிரச்சினை காரணமாகவே வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதாக காவற்துறை மா அதிபர் என்னிடம் தெரிவித்ததாக யாழ் ஆயர் ஜஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.

வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட காவற்துறை மா அதிபர் யாழ் மறைமாவட்ட ஆயரை இன்று மாலை ஆயர். இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் யாழ் ஆயர் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்
தற்போதைய காவற்துறை மா அதிபர் எஸ்எஸ்பியாக, டிஐ ஜியாக யாழ் மாவட்டத்தில் கடமையாற்றி இருந்த ஒருவர் அவருக்கு யாழ்ப்பாணம் நன்றாக தெரியும். யாழ்ப்பாண மாவட்டத்தின் மீது நல்ல விருப்பம் கொண்டவர்.இன்றைய தினம் இங்கே உள்ள பிரச்சினை தொடர்பில் ஆராய யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்து வந்து என்னையும் சந்தித்துள்ளார்.

இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பில்லாத விரக்தி நிலை காரணமாகவே போதைப் பொருள் பாவனை அதிகரித்து காணப்படுகிறது.அதே போல காவற்துறையினர் பொதுமக்களுடன் கூடுதலாக பழகவேண்டும். மக்களுக்கு சேவை செய்யத்தான் காவற்துறையினர் இராணுவத்தால் அது முடியாது. எனவே மக்களுடன் உறவினைப் பேண வேண்டும். முன்னைய காலத்தில் வீதி போக்குவரத்து விதிமுறைகள் பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டது. அதனை மீண்டும் பாடசாலைகளில் ஆரம்பிக்குமாறு நான் கூறி இருக்கின்றேன்.அது மாத்திரமல்லாமல் விழிப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அத்தோடு இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பின்மை காரணமாகவே வடக்கில் வாள்வெட்டு சம்பவங்கள், வன்முறை சம்பவங்கள் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

மக்களுக்கு சேவை செய்யத்தான் காவற்துறையினர். ஆகவே காவற்துறையினர் அதிக அளவில் மக்களுடன் தொடர்பினை பேணவேண்டும். குறிப்பாக போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு தண்டப்பணம் விதிப்பதை விடுத்து அவர்களை ஒரு மணிநேரமாவது தடுத்து நிறுத்தி அவர்களுக்கு விளக்கம் அளிப்பதன் மூலம் தான் எமது மக்களுக்கு அதன் அர்த்தம் புரியும்.

அதனை செயற்படுத்துவதன் மூலம் பொது மக்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பில் விழிப்புணர்வினை ஏற்படுத்த முடியும். தமிழ் காவற்துறையினர் எமக்கு கடமைக்கு தேவையாக உள்ளது.ஏற்கனவே 500 பேர் மாத்திரமே கடமையாற்றி வருகிறார்கள் மேலதிகமாக தமிழ் காவற்துறையினர் நமக்கு தேவையாக உள்ளார்கள். அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வடக்கு மாகாணத்தில் பயிற்றுவிக்கப்படும். ஏனெனில் வடக்கில் இருந்து வெளி மாவட்டங்களில் சென்று பயிற்சி பெறுவதற்கு பலர் விரும்பவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

வடக்கிலிருந்து காவற்துறையினருக்கு விண்ணப்பிப்போருக்கு இங்கேயே பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கு மொழிப் பயிற்சியும் வழங்கப்படும் என காவற்துறை மா அதிபர் கூறியதாக தெரிவித்தார்.