மாலியில் இடம்பெற்ற தாக்குதலில் 02 பிரான்ஸ் வீரர்கள் உயிரிழப்பு
மாலியில் பிரான்ஸ் துருப்பினர் பயணித்த வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு வீரர்கள் உயிரிழந்திருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
நேற்று (சனிக்கிழமை) காலை மாலியின் கிழக்கு பிராந்தியமான மேனகவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு பிரான்ஸ் வீரர் இந்தத் தாக்குதலில் காயமடைந்துள்ள போதும், அவரது உயிருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என சுட்டிக்காட்டப்படுகிறது.
குறித்த இரு உயிரிழப்புக்களுடன் மேற்கு ஆபிரிக்க பிராந்தியத்தில் உயிரிழந்த பிரான்ஸ் துருப்பினரின் எண்ணிக்கை 50 ஆக உயர்வடைந்துள்ளது.
குறித்த பிராந்தியத்தில் அச்சுறுத்தலாக விளங்கிய அல்-ஹைதா இயக்கத்துடன் தொடர்புகளைப் பேணிய பயங்கரவாத குழுக்களை கட்டுப்படுத்தும் முகமாக கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பிரான்ஸ் இராணுவம் அங்கு நிலைகொண்டுள்ளது.
அத்துடன், மாலியில் கடந்த ஒரு வாரத்தில் பிரான்ஸ் வீரர்கள் மீது இடம்பெற்ற இரண்டாவது தாக்குதல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.