பிரெஞ்சு சினிமா இயக்குநர் கோடார்ட் காலமானார்

14.09.2022 10:41:13

 பிரெஞ்ச் - சுவிஸ் திரைப்படத் துறையின் பழம்பெரும் இயக்குநரான ழான் லுக் கோடார்ட், 91, முதுமை காரணமாக நேற்று காலமானார்

ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரிசில், 1930ல் பிறந்த கோடார்ட் பட்டப்படிப்பை முடித்ததும், திரைத்துறை பக்கம் தன் கவனத்தை திருப்பினார்.இவரது முதல் திரைப்படமான, ஆல் பாய்ஸ் ஆர் கால்டு பேட்ரிக் 1959ல் வெளியானது. பழமை பாணியை நிராகரித்து, 1960ல் கோடார்ட் இயக்கிய பிரெத்லெஸ் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று, இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இதன்பின், இவர் இயக்கிய படங்கள் பிரெஞ்ச் திரைத்துறையின் போக்கையே மாற்றி அமைத்தன.

இவரது சர்ச்சைக்குரிய 'ஹெய்ல் மேரி திரைப்படம், போப்பாண்டவரின் கண்டனத்தைப் பெற்று, தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. இத்தாலி, சுவிஸ் உள்ளிட்ட பலமொழி படங்களை இயக்கி பல்வேறு விருதுகளை பெற்ற இவருக்கு, 'ஐரோப்பா பிலிம் அகாடெமி' 2007ல் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்தது. அதேநேரத்தில், 2010ல் வழங்கப்பட்ட கவுரவ ஆஸ்கார் விருதை, இவர் பெற மறுத்துவிட்டார். கோடார்ட் தன் இறுதி நாட்களை சுவிட்சர்லாந்தில் உள்ள ரோல் என்ற இடத்தில் கழித்தார்.