ஜிவி.பிரகாஷின் இடி முழக்கம் ரீமேக்கா?

29.09.2021 16:05:09

தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய சீனு ராமசாமி, அடுத்ததாக இயக்கி உள்ள படம் 'இடிமுழக்கம்'. ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக காயத்ரி சங்கர் நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், சுபிக்ஷா, சௌந்தரராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

சீனுராமசாமி கிராமம் சார்ந்த மனித உணர்வுகளின் பின்னணியில் படம் இயக்குபவர். இடிமுழக்கத்தில் முதல்முறையாக ஆக்ஷன் கதைக்கு திரும்பியுள்ளார். படத்தின் கதை நடப்பது கிராமத்தில். இந்த கதை மலையாள லட்சியம் படத்தின் ரீமேக் என தகவல் பரவுகிறது.

லட்சியம் படம் 2017 இல் வெளியானது. படத்தின் திரைக்கதையை எழுதியவர் பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப். படத்தின் இணை தயாரிப்பும் இவரே. பிஜு மேனனும், இந்திரஜித்தும் பிரதான வேடங்களில் நடித்திருந்தனர். பிஜு மேனனும், இந்திரஜித்தும் போலீசால் கைது செய்து அழைத்துச் செல்லப்படும் போது, அவர்கள் செல்லும் வாகனம் விபத்துக்குள்ளாக, இருவரும் கையில் விலங்குடன் தப்பிக்கிறார்கள். பிஜு மேனன் மால் ஒன்றில் கைக்கடிகாரம் திருடியதற்காக கைது செய்யப்பட்டிருப்பார். இந்திரஜித் தனது காதலியை கொலை செய்தார் என கைது செய்திருப்பார்கள். உண்மையில் அவர் கொலை செய்யவில்லை. யார் கொலை செய்தது என்பதை கண்டுபிடிக்க, 3 லட்சங்கள் தருவதாக இந்திரஜித் பிஜு மேனனிடம் பேரம் பேசுவார். கொலையாளி யார் என்பதுதான் கதை.

இந்தக் கதையைதான் இடிமுழக்கம் என்ற பெயரில் சீனுராமசாமி எடுத்துள்ளார் என சிலர் கூறி வருகின்றனர். லட்சியம் இரு ஹீரோ சப்ஜெக்ட். ஆனால், இடிமுழக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ் மட்டும்தான் ஹீரோ. அதனால் இது வேறு கதை என்கிறார்கள் படக்குழுவினர்.