ரணில் தனது நண்பர் இல்லை என கூறுகிறார் அனுர!
பல அரசியல்வாதிகள் கூறுவது போன்று ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து அரசாங்கத்தை அமைப்பதற்கோ அல்லது அவருடன் இணைந்து செயற்படுவதற்கோ விக்ரமசிங்கவுடன் ஏதேனும் இரகசிய ஒப்பந்தத்தில் ஈடுபட்டிருந்தால், இருவரும் ஜனாதிபதி வேட்பாளர்களாக ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிட்டிருக்க தேவையில்லை என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க, தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக ஊகங்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் உண்மையில், விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் தன்னை தோற்கடிக்க ஒன்றிணைந்துள்ளதாக தான் கருதுவதாகவும். விக்கிரமசிங்க தன்னை ‘அவரது நண்பர்’ என்று தொடர்ந்து அழைக்கிறார். ஆனால் தாம் நண்பர்கள் அல்ல, அரசியல் போரில் தாம் போட்டியாளர்கள் என அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.
அண்மைக் காலங்களில் விக்ரமசிங்கவைச் சந்திக்கவில்லை என்றும், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான தனது பிரச்சாரத்தில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் NPP தலைவர் மேலும் தெரிவித்தார். விக்கிரமசிங்க மற்றும் SJB ஆகிய இரு பக்கங்களும் தங்களுக்கு அதிக வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே ஜனாதிபதி தன்னுடன் இரகசிய ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாக வதந்திகளைப் பரப்புவதாக அவர் கூறினார்.
இப்போது விக்ரமசிங்கவுடன் இருக்கும் SLPP உறுப்பினர்கள் சிலர் ஊழல் குற்றச்சாட்டுக்களால் மக்களால் நிராகரிக்கப்பட்டதால், அவர்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இல்லை என்றும் திஸாநாயக்க மேலும் கூறினார். “அப்படிப்பட்டவர்களுடன் தான் எப்படி வேலை செய்ய முடியும்?” என திஸாநாயக்க கேள்வி எழுப்பி உள்ளார்.
அண்மைக்காலமாக விக்கிரமசிங்கவுக்கும் திஸாநாயக்கவுக்கும் இடையில் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கு விக்கிரமசிங்க திஸாநாயக்கவிடம் கேள்விகளை முன்வைத்துள்ளார். NPP விஞ்ஞாபனத்தில் அறிவிக்கப்பட்ட திறந்த வர்த்தக உடன்படிக்கைகளை நீக்குவதன் மூலம் திஸாநாயக்கவால் எவ்வாறு ஏற்றுமதிகளை அதிகரிக்க முடியும் என்று அவர் கேட்டார்.
“எனது நண்பர் அனுரகுமார திஸாநாயக்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் திறந்த வர்த்தக சட்டத்தை நீக்குவதாக உறுதியளித்துள்ளார். அதே நேரத்தில், ஏற்றுமதியை அதிகரிக்க உறுதியளித்தார். FTA இல்லாமல் ஏற்றுமதியை எப்படி ஊக்குவிக்க முடியும். என் கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை. அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை பின்னர் அறிந்தேன். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” என்று விக்கிரமசிங்க கூறினார்.
SJB ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில், விக்ரமசிங்கவும் திஸாநாயக்கவும் தனக்குத் தடையாக இருக்க இரகசியமாகச் செயற்படுவதாகக் கூறி இந்த நெருப்பிற்கு எண்ணெய் ஊற்றியமையும் குறிப்பிடத்தக்கது.