
பிரபலமாவாரா புகழ்
டிவியில் இருந்து சினிமாவுக்குச் சென்று சாதித்த நடிகர்களில் முக்கியமானவர்கள் சிவகார்த்திகேயன், சந்தானம், யோகிபாபு. இவர்கள் மூவருமே விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி படிப்படியாகப் பிரபலம் அடைந்து பின்னர் சினிமாவிலும் நுழைந்து அங்கும் முன்னணிக்கு உயர்ந்தார்கள்.
அவர்களது வரிசையில் தற்போது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த புகழ் 'சபாபதி' படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக நுழைகிறார். சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள 'சபாபதி' படம் வரும் வாரம் நவம்பர் 19ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது. சந்தானம் தான் கதாநாயகன் என்றாலும் புகழுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பட விளம்பரங்களை வெளியிடுகிறார்கள்.
சின்னத்திரையில் தனது டைமிங் காமெடி மூலம் மக்களை சிரிக்க வைத்த புகழ் பெரிய திரையிலும் அதைத் தொடரட்டும் என இன்றைய அவரது பிறந்தநாளில் வாழ்த்துவோம்.