பிரான்சை முடக்கிய பல்லாயிரம் பேர்..! அரசாங்கத்தின் புதிய திட்டத்திற்கு எதிர்ப்பு

19.01.2023 22:34:27

பிரான்சில் அதிபர் இமானுவேல் மக்ரனின் அரசாங்கம் கொண்டுவர திட்டமிட்டுள்ள பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் சீர்திருத்தத்துக்கு எதிராக இன்று தொழிற்சங்களின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் பெரும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் இன்று பிரான்சுக்கு கறுப்பு வியாழன் என வர்ணிக்கும் அளவுக்கு இயல்பு வாழ்வில் முடக்க நிலை இருந்தது.

ஓய்வூதிய மறுசீரமைப்பு

பிரான்சில் தற்போது ஓய்வு பெறும் வயது 62 ஆக உள்ள நிலையில், அதனை 64 ஆக உயர்த்தும் வகையில் அரசாங்கம் மறுசீரமைப்பு ஒன்றை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.

கடந்த சிலவருடங்களாக, இவ்வாறான சீர்திருத்தம் குறித்துப் பேசப்படுகின்ற போதிலும் அதற்குரிய எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டு வருவதால் அதன் நடைமுறை பெரும் சவால்களை சந்தித்து வருகிறது.

மூன்று வருடங்களுக்கு முன்னர் கடந்த 2019 டிசம்பர் 5 ஆம் திகதி இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டஙகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற நிலையில், கொரோனா தொற்றின் பின்னணியில் 2020 மார்ச்சில் மக்ரன் தனது திட்டத்தை கைவிட்டிருந்தார்

எனினும் தற்போது அரசாங்கம் மீண்டும் இந்தச் சீர்திருத்தத்தை கொண்டுவரத் திட்டமிடுகிறது.

பிரதமர் எலிசபெத் போர்ன் இந்த மாத தொடக்கத்தில் பரிந்துரைத்த திட்டங்களின்படி, எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு ஒருவர் தனக்குரிய முழுமையான ஓய்வூதியம் பெறுவதற்கு 43 ஆண்டுகாலத்துக்கு அவர் பணிசெய்திருக்க வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரிய எதிர்ப்பு பேரணி

இதனடிப்படையில் தற்போதைய நடைமுறையை மாற்றும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்படும் நிலையில், இன்று நாடளாவிய ரீதியில் பெரும் பணிப் புறக்கணிப்போராட்டமும் பாரிய எதிர்ப்பு பேரணிகளும் நடத்தப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் 225 க்கு மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், அவற்றில் பல லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்றுள்ளனர்.

பாதுகாப்புக்கென நாடளாவிய ரீதியில் 10,000 காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

பாரிஸ் நகரில் பொதுப்போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், பாரிஸில் இடம்பெற்ற பேரணிகளில் 80,000 பேர்வரை ஒன்று கூடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.