லோகேஷ் கனகராஜின் 'கூலி'யாக மிரட்டும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
'ஜெயிலர்' படத்தின் பிரம்மாண்டமான வசூல் வெற்றியைத் தொடர்ந்து சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'கூலி' என பெயரிடப்பட்டு பிரத்யேக டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கூலி' எனும் திரைப்படத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதையின் நாயகனாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
டீசரில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களின் ஃபேவரைட்டான எக்சன் காட்சி மூலம் அறிமுகமாகி இருக்கிறார். மேலும் அந்தக் காட்சியை சுவாராசியப்படுத்த அவர் நடிப்பில் வெளியான 'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் இடம்பெற்ற 'சம்போ சிவ சம்போ..' பாடலின் வரிகளை ஸ்டைலாக பேசும் காட்சிகளும், பின்னணியில் இளையராஜாவின் ஹிட்டான பாடல்கள் ஒலிப்பதும் ரசிகர்களை உற்சாகப்பட வைத்திருக்கிறது. லோகேஷ் இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களின் பல்ஸை பிடித்து பார்த்து சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார். ரஜினிகாந்தின் திரை தோற்றம் அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதனால் படத்தின் டீசர் வெளியாகிய குறுகிய கால அவகாசத்திற்குள் நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
ஆனால் படத்தின் கதை கள பின்னணி தங்க கடத்தல் போன்ற சட்டவிரோத காரியங்களின் பின்னணியில் அமைக்கப்பட்டிருப்பதால், லோகேஷ் கனகராஜ் தன்னுடைய வழக்கமான பாணியில் தான் கதையை சொல்வார் என எதிர்பார்க்க முடிகிறது. அத்துடன் படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இருந்தாலும் லோகேஷ் கனகராஜ் தனக்கான தனித்துவமான சினிமா உலகத்தை படைத்து ரசிகர்களை கவர்ந்து வருவதால் அவரது இயக்கத்தில் உருவாகும் கூலி திரைப்படமும் ரசிகர்களை வெகுவாக கவரும் என உறுதியாக தெரிவிக்கலாம்.
இதனிடையே நடிகர் சரத்குமார் நடிப்பில் பி. வாசு இயக்கத்தில் 'கூலி' எனும் பெயரில் திரைப்படமொன்று வெளியானது என்பதும், சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கூலி' எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதும், 'கூலி' எனும் பெயரில் இந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் திரைப்படம் வெளியாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.