ரிஷியின் கட்சிக்கு முற்றுப்புள்ளி
பிரித்தானியாவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில், பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சியின் அரசியல் வீழ்ச்சியைச் சந்திக்க வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், எந்த கட்சிக்கு எவ்வளவு ஆசனங்கள் கிடைக்கும் என்பது தொடர்பாக பல அமைப்புகள் ஆய்வுகளை நடத்தி தனது கருத்துக்கணிப்புகளின் முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.
அதன்படி, Savanta என்னும் ஆய்வமைப்பு, ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு, இந்த தேர்தலில் 21 சதவீத ஆதரவு மட்டுமே கிடைக்கும் என தெரிவித்துள்ளது.
இந்த தேர்தல், கன்சர்வேட்டிவ் கட்சியின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையலாம் என, தங்களின் ஆய்வு முடிவுகள் கூறுவதாக Savanta ஆய்வமைப்பின் இயக்குநர் Chris Hopkins குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், Keir Starmer இன் லேபர் கட்சி 46 சதவீத ஆதரவைப் பெற்றுள்ளதாக குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, Sunday Telegraph எனும் அமைப்பு மேற்கொண்ட கருத்துக்கணிப்பின்படி, லேபர் கட்சி 25 புள்ளிகள் பெற்று முன்னிலையில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, Survation என்ற அமைப்பு வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், பிரித்தானிய நாடாளுமன்றத்திலிருக்கும் 650 இருக்கைகளில், கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 72 இருக்கைகள் மட்டுமே கிடைக்கும் எனவும், லேபர் கட்சியோ, 456 இருக்கைகளைக் கைப்பற்றும் எனவும் கணித்துள்ளது.
200 ஆண்டுகளில் இல்லாதளவில், கன்சர்வேட்டிவ் கட்சி மிகவும் மோசமான தேர்தல் முடிவுகளை சந்திப்பது இததான் முதல்முறை எனவும் Survation என்ற அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், YouGuv அமைப்பின் கருத்துக்கணிப்பின்படி, பிரெக்சிட் கட்சி என அழைக்கப்பட்ட, Nigel Farage இன் Reform UK கட்சி, கன்சர்வேட்டிவ் கட்சியை மூன்றாம் இடத்துக்குத் தள்ளி, எதிர்க்கட்சி என்னும் அந்தஸ்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
அதன்படி, கன்சர்வேட்டிவ் கட்சிக்கு எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து கூட கிடைக்காது என கருதப்படுகிறது.