சாணக்கியனை எச்சரித்த பிரதமர் ரணில்

11.06.2022 06:37:18

இலங்கையில் இடம்பெற்ற கலவரத்தை தூண்டும் வகையிலும் அதனை ஆதரிக்கும் வகையிலும் இரா.சாணக்கியன் எம்.பி. சபையில் தெரிவித்த கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் அதுதொடர்பில் விசாரணை நடத்தவேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற காலம் சென்ற அமரகீர்த்தி அத்துகோரலின் மறைவு தொடர்பான அனுதாப பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பட்டுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் பல இடம்பெற்றிருக்கின்றன.

லக்ஷ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்டபோது அதனை நாங்கள் அனைவரும் இந்த சபையில் கண்டித்தோம். வெளியில் விடுதலை புலிகள் அவரை விமர்சித்து வந்தபோதும் நாங்கள் ஒன்றாக செயற்பட்டோம்.

ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை தவிர இந்த சம்பவத்தை எதிர்க்கட்சி தலைவர் உட்பட அனைவரும் கண்டித்தார்கள்.

அதுதான் எனது கவலை. மே மாதம் 20ஆம் திகதி சாணக்கியன் இந்த சபையில் உரையாற்றும் போது, 20ஆம் திருத்தம் போன்று, நாட்டுக்கு நன்மை பயக்காத விடயங்களுக்கு வாக்களித்ததன் காரணமாகவே வீடுகள் எரிக்கப்பட்டன.

2020 வரவு செலவு திட்டம் 2021 வரவு செலவு திட்டத்தில் பிழையான பொருளாதார கொள்கை இருந்தது. அந்த வரவு செலவு திட்டங்களுக்கு கை உயர்த்தியதன் காரணமாகவே வீடுகள் எரிக்கப்பட்டன.

மக்களை காட்டிக்கொடுத்ததால்தான் உங்களுக்கு இது இடம்பெற்றது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என குறிப்பிட்டிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எப்படி இவ்வாறு உரையாற்ற முடியும். லக்ஷ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்டபோது விடுதலை புலிகள் அதனை வெளியில் இருந்து விமர்சித்தார்கள்.

ஆனால் தற்போது அதனை சபைக்குள் செய்கின்றனர். அப்படியானால் வீடுகள் எரிக்கப்பட்டதை, இடம்பெற்ற கொலைகளை, குமார் வெல்கம மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை அவர் அனுமதிக்கின்றாரா?. நாடாளுமன்றத்தை சுற்றிவளைக்கும்போது, எமக்கு எந்த பாதிப்பும் இல்லை என இங்ங்கு வந்து தெரிவித்திருந்தார்.

மறுநான் முன்னிலை சோசலிச கட்சி குமார் குணரத்னத்துடன் இணைந்து படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

எனவே சாணக்கியன் எம்.பி. எதிர்வரும் சபை அமர்வின்போது அவர் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்து, அதனை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இதுதொடர்பில் விசாரணை நடத்தி, உரிய குழுவுக்கு அதனை வழங்கி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என சபாநாயகரை கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.