"தமிழ்நாடு பின்னுக்கு தள்ளப்படும், என்ன செய்ய போறீங்க?

24.08.2026 15:05:34

 

தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் விஜய் பரந்தூர் விமான நிலையத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளர். இதை அடுத்து அப்பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலத்தை அரசு என்ன செய்யப் போகிறது? என கேள்வி எழுப்பியிருக்கிறார் வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவரான அண்ணாமலை. அது மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்கள் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு பின்னுக்கு தள்ளப்படும் எனவும் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்றைய தினம் சட்டப்பேரவையில், தமிழக முதலமைச்சர் விஜய் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

    

 

சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்காக வேறு சில இடங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், புதிய இடம் எது என்பதையும் முதலமைச்சர் அறிவித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அண்ணாமலை ஏனெனில், இரண்டாவது விமான நிலையத்திற்கான இடத்தைத் தேர்வு செய்யத் தாமதப்படுத்துவதால், தமிழ்நாட்டின் வளர்ச்சி குறைந்தது 10 ஆண்டுகள் தாமதிக்கும் அபாயம் உள்ளது. பரந்தூர் திட்டத்திற்கு மாற்றாக வேறு இடத்தில் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க தமிழக அரசு நிர்வாக ரீதியாக முடிவெடுத்தாலும், புதிய இடத்தைத் தேர்வு செய்வது, மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட சட்டப்பூர்வமான அனுமதிகளைப் பெறுவது, ஒப்பந்தப்புள்ளிகள் கோருவது, நிலம் கையகப்படுத்துவது, தேவையான உரிமங்கள் பெறுவது என, விமான நிலையம் செயல்பாட்டுக்கு வர குறைந்தது 10 ஆண்டுகள் ஆகலாம்.

அதற்குள் மற்ற மாநிலங்கள் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு பின்னுக்குத் தள்ளப்படும். இன்றைய தேவைக்கே சென்னை விமான நிலையம் போதுமானதாக இல்லை என்பதை முதலில் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். சென்னை விமான நிலையத்தின் பரப்பளவு சுமார் 1,300 ஏக்கர். ஆனால், ஹைதராபாத் விமான நிலையம் சுமார் 5,500 ஏக்கர், பெங்களூரு விமான நிலையம் 4,000 ஏக்கர், நவி மும்பை விமான நிலையம் 2,866 ஏக்கர், டெல்லி விமான நிலையம் 5,100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. இவ்வளவு குறைந்த பரப்பளவில் இயங்கும் சென்னை விமான நிலையம், குறைந்தபட்சம் பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும். ஆனால், விமான நிலையத்தில் தரையிறங்கும் பகுதியில் இருந்து வெளியே வந்து, உள்ளூர் போக்குவரத்தை அடைவதற்கே பயணிகள் இன்று பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.

ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் நுழைவாயிலாக இருந்த சென்னை, இன்று விமானப் பயணிகள் கையாளும் திறனில் 5-வது இடத்தில் உள்ளது. ஆண்டுக்கு சுமார் 3 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்ட சென்னை விமான நிலையத்தை விட டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்கள் முன்னிலையில் உள்ளன. பெங்களூரு - ஹைதராபாத் மேலும், சென்னை விமான நிலையத்தில் போதுமான டாக்ஸிவேக்கள் மற்றும் ஏர்பிரிட்ஜ்கள் இல்லாத காரணத்தால், பெரிய விமானங்களைக் கையாளும் திறன் கொண்ட Code F விமான நிலையமாக சென்னை விமான நிலையம் வகைப்படுத்தப்படவில்லை. இதனால் A380 போன்ற மிகப்பெரிய விமானங்கள் தரையிறங்க, சென்னை விமான நிலையம் ஏற்றதாக இல்லை. தென்னிந்தியாவில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்கள் பெரிய விமானங்களை கையாளும் Code F விமான நிலையங்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசு கட்சிகள் வரலாம், போகலாம்.

ஆட்சிகள் மாறலாம். ஆனால் இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டு மக்கள் திரும்பிப் பார்க்கும்போது, தொலைநோக்குப் பார்வையற்ற நிர்வாகத்தின் காரணமாக, ஒரு தரமற்ற கட்டிடத்தை விமான நிலையம் என்று அழைக்கும் நிலையில் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்று வருந்தக்கூடாது. எனவே, தமிழ்நாடு அரசு இனியும் தாமதிக்காமல், சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கான பொருத்தமான இடத்தை உடனடியாகத் தேர்வு செய்து, விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். மேலும், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியான செய்திகளின்படி, பரந்தூர் விமான நிலையத்திற்குத் தேவையான 5,746 ஏக்கரில் சுமார் 1,700 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு ஏற்கனவே கையகப்படுத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பரந்தூர் திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ள நிலையில், அந்த 1,700 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு இனி என்ன செய்யப் போகிறது? இதற்கான தெளிவான பதிலையும் தவெக அரசு, மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்." என கூறியுள்ளார்.