200 பெண் நீதிபதிகளை தேடும் தலிபான்கள்

12.09.2021 18:52:05

முந்தைய ஆட்சியில் தங்களுக்கு சிறை தண்டனை வழங்கியதற்காக  சித்ரவதை செய்து பழி தீர்க்க சுமார் 200 பெண் நீதிபதிகளை தலிபான்கள் தேடி அலைவதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் இடைக்கால அரசு அமைந்ததும், நாடு முழுவதும் சிறைச்சாலைகளில் இருந்து ஏராளமான தலிபான்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இப்போது அவர்கள், தங்களுக்கு தண்டனை வழங்கிய நீதிபதிகளை குறிப்பாக பெண் நீதிபதிகளை பழி தீர்க்க வலைவீசி தேடி வருகின்றனர். பெண்களுக்கு எதிரான மனப்போக்கை கொண்ட தலிபான்கள், அவர்களை சித்ரவதை செய்து கொலை செய்யும் நோக்கத்துடன் அலைந்து வருவதாகவும், இதனால், 200க்கும் மேற்பட்ட பெண் நீதிபதிகள் உயிர் பயத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் பிரிட்டனின் ‘தி இன்டிபென்டன்ட்’ செய்தி நிறுவனம், தனது செய்தியில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நங்கர்ஹார் மாகாணத்தைச் சேர்ந்த 38 வயது பெண் நீதிபதி, தலைமறைவான இடத்தில் இருந்து அளித்த பேட்டியில், ‘எட்டு மாதங்களுக்கு முன்பு, மனைவியை சித்ரவதை செய்த குற்றத்திற்காக தலிபான் ஒருவனுக்கு தண்டனை விதித்தேன். அப்போது அவன், ‘நான் வெளியில் வந்ததும் உன்னை சித்ரவதை செய்து கொல்கிறேன்’ என கூச்சலிட்டான். 

அப்போது அதை பெரிதாக எண்ணவில்லை. ஆனால், இப்போது எங்கு பார்த்தாலும் தலிபான்கள் அலைகிறார்கள். வீடு வீடாக சென்று நீதிபதிகள், முன்னாள் அரசு ஊழியர்கள் பற்றி விசாரிக்கிறார்கள். இதனால், குடும்பத்துடன் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறேன். என் வீடு, வேலை போனது பற்றியெல்லாம் கூட கவலையில்லை. ஆனால், என்னால் எனது குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்படுமோ என பயப்படுகிறேன். 

தலிபான்களால் எது வேண்டுமானாலும் நடக்கலாம்,’ என்று கூறியுள்ளார். லண்டனில் வசித்து வரும் ஆப்கான் முன்னாள் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி மர்ஜியா பாபாகர் கெயில் கூறுகையில், ‘பெண் நீதிபதிகள் தலிபான் மற்றும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளால் கொலை அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். 

என் சகோதரரை தலிபான்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர்’’ என்றார். பெண்கள் ஆதரவு பேரணி 'இதற்கிடையே, தலைநகர் காபூலில் நேற்று தலிபான்களுக்கு ஆதரவாக பெண்கள் நடத்திய பேரணி புகைப்படங்கள் வைரலாகி உள்ளன.

 தலிபான் கொடியுடன் ‘இவர்களால் தான் நாங்கள் பாதுாப்பாக இருக்கிறோம்’ என பல ஆதரவு வாசகங்களுடன் பெண்கள் பேரணியாக சென்றனர். அப்பெண்கள் அனைவருமே தலை முதல் கால் வரை ஹிஜாப் போட்டு மூடியபடி சென்றனர். கைகளிலும் கறுப்பு நிற கிளவுஸ் அணிந்திருந்தனர். தலிபான்கள் விதித்த முழு ஆடைக்கட்டுப்பாட்டுடன் பெண்கள் பேரணி சென்றனர்.