காட்விக் விமான நிலையத்தில் வெடிப்பு சம்பவம்!

14.04.2025 07:55:05

பிரித்தானியாவின் காட்விக் விமான நிலையத்தில் திடீரென கார் வெடித்து தீப்பிழம்பு வந்ததால் பயணிகள் பீதியடைந்தனர். பிரித்தானியாவின் காட்விக் விமான நிலையத்தில்(Gatwick Airport) உள்ள கார் பார்க்கிங் 6-ல் நிறுத்தப்பட்டிருந்த கருப்பு நிற வோக்ஸ்வாகன் கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தீ விபத்தின் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அதில் கார் தீப்பிடித்து எரிவதையும் வானில் புகை மற்றும் தீப்பிழம்புகள் எழுவதையும் பார்க்க முடிகிறது.

இந்த தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது. காரின் டயர்கள் வெடித்ததால் ஏற்பட்ட வெடி சத்தங்கள், பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.

இந்த அசாதாரண சூழ்நிலையில், அருகில் இருந்த AA வேன் சாரதி தீயை அணைக்க தீயணைப்பான் உதவியுடன் முயற்சித்தார்.

இருப்பினும், தீயின் தீவிரம் அதிகமாக இருந்ததால் தொழில்முறை தீயணைப்பு வீரர்களின் உதவி தேவைப்பட்ட நிலையில், வெஸ்ட் சசெக்ஸ் தீ மற்றும் மீட்பு சேவையின் (WSFRS) இரண்டு தீயணைப்பு வண்டிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் தீ விபத்தினால் விமான நிலையத்தின் செயல்பாடுகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இதில் பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் என யாருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை.