இயக்குநர் லோகேஷ் அழைப்பு விடுத்தால் வில்லனாகவும் நடிப்பேன்

07.05.2024 07:10:00

'கைதி' படத்தில் மூலம் அறிமுகமாகி,  வசீகரமான குரலால் ரசிகர்களை கவர்ந்தவர் அர்ஜுன் தாஸ். தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'மாஸ்டர்', 'விக்ரம்' ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருந்தார். இப்படங்களைத் தொடர்ந்து அவர் 'அநீதி', 'போர்' படங்களின் மூலம் கதாநாயகனாக உயர்ந்திருக்கிறார்.   இவர் நடிப்பில் தயாராகி விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் 'ரசவாதி'.

இந்நிலையில் ஊடகங்களை சந்தித்து அர்ஜுன் தாஸ் பேசுகையில், '' பல இயக்குநர்களிடம் கதைகளை கேட்டு, அதில் எனக்கு பிடித்த கதைகளை தெரிவு செய்து நடித்து வருகிறேன். நல்ல கதாபாத்திரங்களை நடிப்பதன் மூலம் எல்லோரையும் மகிழ்விப்பேன்.

இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'ரசவாதி' படத்தின் கதையை கேட்டதும் பிடித்தது. இந்த திரைப்படத்தில் வைத்தியர் ஒருவர் ஓய்வுக்காக மலை வாசஸ்தலத்திற்கு செல்கிறார். அங்கு அவருக்கு என்ன நடக்கிறது? என்பதுதான் கதை. இந்தத் திரைப்படத்தில் காதல் காட்சிகளில் நடித்திருக்கிறேன். அடுத்ததாக இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் தயாராகும் படத்திலும் காதல் காட்சிகளில் நடித்திருக்கிறேன். 

லோகேஷ் கனகராஜ் தான் என்னுடைய திரை பயணத்தை 'கைதி' மூலம் தொடங்கி வைத்தவர். தொடர்ந்து பல வாய்ப்புகளை வழங்கியவர். அவர் தான் என்னுடைய வழிகாட்டி. அவர் அழைப்பு விடுத்தால் வில்லனாக நடிக்கவும் தயார். வில்லனுக்கு பின்னணி பேச வாய்ப்பு கொடுத்தாலும் மறுக்காமல் ஒப்புக் கொள்வேன். ஏனெனில் என்னுடைய திரை பயணம் முழுக்க அவர் ஆக்கிரமித்திருக்கிறார்.  விரைவில் அவரது இயக்கத்தில் உருவாகும் 'கைதி 2' படத்தில் நான் இருப்பதாக சொல்லியிருக்கிறார். அவரது இயக்கத்தில் கார்த்தியுடன் பணியாற்றும் வாய்ப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.'' என்றார்.