2,000 கடந்த மாயமானவர்கள் எண்ணிக்கை!

02.11.2024 08:22:09

பெருவெள்ளத்தால் சிதைந்துள்ள ஸ்பெயினில் வலென்சியா மாகாணத்தில் மட்டும் கிட்டத்தட்ட 2,000 பேர்கள் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குடும்பத்தினர் பலர் தங்கள் அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிக்க தீவிர முயற்சிகள் முன்னெடுத்துள்ளனர். மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகள் அனைத்தும் ஸ்தம்பிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

   

இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் 205 பேர்கள் இறந்துள்ளனர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர், ஆனால் மொத்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக உயரும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

இன்னும் தேடப்படாத இரண்டாம் நிலை சாலைகளில் சிக்கியுள்ள கார்களில் பல சடலங்கள் காணப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை மீட்கப்பட்டுள்ள சடலங்களில் 202 பேர்கள் வலென்சியா மாகாணத்தில் இருந்து மட்டும் என கூறப்படுகிறது.

அண்டலூசியா மற்றும் பலேரிக் தீவுகள் உட்பட நாட்டின் பிற பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. வலென்சியா மற்றும் கேட்டலோனியா பகுதிகளுக்கு வார இறுதி வரை மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.

மாயமானவர்கள் தொடர்பில் பதிவு செய்யும் பொருட்டு தொலைபேசி இலக்கம் ஒன்று வெளியிடப்பட்ட நிலையில், இதுவரை 1,900 பேர்கள் மாயமானதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், வியாழக்கிழமை மட்டும், மாயமானதாக பதிவு செய்யப்பட்டவர்களில் 600 பேர்கள் திரும்பியுள்ளனர். இதனிடையே, சடலங்களை அடையாளம் காணும் துயரமான நடவடிக்கையை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். இதுவரை 17 பேர்கள் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டர்கள் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு பயணித்து சுத்தப்படுத்தவும் உடல்களைத் தேடும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். ஸ்பெயின் நாட்டின் ராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளது.

உளவியல் ஆலோசனை நிபுணர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அரசாங்கத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பேரிடருக்கு மத்தியில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 64 பேர்கள் இதுவரை கைதாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வலென்சியா மற்றும் பார்சிலோனா இடையே ரயில் சேவைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் சுமார் 15,000 வீடுகள் மின்சாரம் இல்லாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

      Bookmark and Share Seithy.com