வங்கதேசத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு !

08.08.2022 10:45:28

பெட்ரோல் மற்றும் டீசல் விலை 50 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

வங்கதேசத்தில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதையடுத்து, நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.வங்கதேசத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த விலை உயர்வு இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.அதன்படி, டீசல் விலை லிட்டருக்கு 34 டாக்காவும், ஆக்டேன் லிட்டருக்கு 46 டாக்காவும், பெட்ரோல் லிட்டருக்கு 44 டாக்காவும் உயர்ந்துள்ளது.

இதன்மூலம், பெட்ரோல் மற்றும் டீசல் விலை 50 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. 1971ல் வங்கதேசம் சுதந்திரம் பெற்ற பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு 51.7 தவீதத்திற்கும் மேலாக விலை உயர்வு எற்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் இப்போது 135 டாக்காவாக உள்ளது, இது முந்தைய விலையை விட 51.7 சதவீதத்திற்கும் அதிகமாகும். வங்கதேச எரிசக்தி அமைச்சகம் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது, சர்வதேச சந்தை நிலவரப்படி எரிபொருள் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று அரசு தெரிவித்துள்ளது.


இந்த திடீர் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி, கோபமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வங்கதேசம் முழுவதும் எரிபொருள் நிலையங்களை சூழ்ந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் தட்டுப்பாடு காரணமாக, பெட்ரோல் பம்புகளுக்கு வெளியே மக்கள் தங்கள் வண்டிகளுடன் பெட்ரொல் நிரப்ப நீண்ட வரிசையில் நின்றனர். "புதிய விலை எல்லோராலும் சகித்துக்கொள்ள முடியாது. ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை. மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும்" என்று அந்நாட்டு மின்சாரம், எரிசக்தி மற்றும் கனிம வளத்துறை மந்திரி நஸ்ருல் ஹமீத் செய்தியாளர்களிடம் கூறினார்.