நாடாளுமன்றில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட ஹெலிகாப்டர்கள் தொடர்பாக சூடான விவாதம் !!!

10.03.2021 09:02:08

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விமானப்படையால் வழங்கப்பட்ட ஹெலிகாப்டர்கள் தொடர்பாக இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் சூடான விவாதம் இடம்பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ விதானகே மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஆகியோர், ஜனாதிபதிக்கு வழங்கிய சேவைகள் குறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் குறித்த காலகட்டத்தில் சில சுற்றுப் பயணங்களில் ஜனாதிபதிக்கு இரண்டு ஹெலிகாப்டர்கள் ஏன் வழங்கப்பட்டன என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

அதேவேளை தேர்தலின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரச சொத்து பயன்பாட்டைக் குறைப்பதாக உறுதியளித்ததாகவும், ஜனாதிபதி இதுவரை தனது பதவிக் காலத்தில் இதுபோன்ற மாற்றங்களைச் செய்திருக்கிறாரா என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ, பாதுகாப்பு காரணங்களுக்காக ஜனாதிபதிக்கு இரண்டு ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்டுள்ளன என கூறினார்.

மேலும் வீதிகளில் பயணிக்கும்போது ஜனாதிபதி மூன்று வாகனங்களுடன் மட்டுமே பயணிக்கிறார் என்றும் கடந்த காலத்தைப்போன்று பெரிய வாகன பேரணியுடன் அல்ல என்றும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை பழைய பாரம்பரிய நடைமுறைகளைத் திருத்துதல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல கொள்கை மாற்றங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செய்துள்ளார் என்றும் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.