நடிகர் விவேக்கின் நினைவாக மரம் நட்டு ‘மங்களம்’ என பெயர்சூட்டிய பிரபல நடிகர்

18.04.2021 11:24:55

நடிகர் விவேக்கின் நினைவாக மரம் ஒன்றை நட்டுள்ள பிரபல நடிகர், அந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் விவேக். தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ள இவர், நேற்று காலமானார். இவரது உடல் நேற்று மாலை காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், நடிகர் விவேக்கின் நினைவாக நடிகர் நகுல் மரம் ஒன்றை நட்டுள்ளார். மேலும் அந்த மரத்திற்கு ‘மங்களம்’ என பெயர் வைத்துள்ளதாக நகுல் தெரிவித்துள்ளார். 

நடிகர் நகுல், ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் விவேக்குடன் இணைந்து நடித்திருந்தார். அப்படத்தில் விவேக்கின் பெயர் ‘மங்களம்’. அதனை நினைவு கூறும் வகையில், தற்போது மாமரம் ஒன்றை நட்டு, அதற்கு அவ்வாறு பெயர் சூட்டியுள்ளார். மேலும் மரம் நடும் வீடியோவையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.