இலங்கையில் உருவான கூட்டுப் பொறிமுறை
உணவில் தன்னிறைவுடைய நாடாக இலங்கையை அடுத்த வருடமளவில் உறுதி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்துடன் இணைந்து செயற்படுமாறு ரொட்டரி கழகத்துக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
நகர்புறங்களுக்கு அவசியமான உணவு உற்பத்தி, களஞ்சியப்படுத்தல், விநியோகம் என்பவற்றை முறையாக ஒழுங்குபடுத்தும் நோக்கில் இலங்கை ஒரு கூட்டு பொறிமுறையொன்றை உருவாக்கியிருப்பதாக அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
ரொட்டரிக் கழகத்தின் சர்வதேச தலைவர் ஜெனிபர் ஜோன்ஸின் இலங்கை வருகையை கௌரவிக்கும் முகமாக ரொட்டரி கழகம் அண்மையில் ஷங்ரில்லா விடுதியில் ஏற்பாடு செய்த ஒன்றுகூடலில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தார்.
கூட்டுப் பொறிமுறை
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள கூட்டு பொறிமுறையின் கீழ் போஷாக்கு குறைபாடு, உணவு இல்லாதவர்களுக்கு எவ்வாறு உணவை பெற்றுக் கொடுப்பது உள்ளிட்ட விடயங்களில் கவனம் செலுத்தப்படுமென குறிப்பிட்டார்.
இலங்கை கடினமான காலப்பகுதியை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்தில் ரொட்டரிக் கழகம் இலங்கைக்கு மருந்துகளைப் பெற்றுக் கொடுத்தமை தொடர்பிலும் அதிபர் இந்த சந்தர்ப்பத்தில் நினைவுகூர்ந்தார்.
அடுத்த 25 வருடங்களில் இந்நாட்டை மிகவும் அழகான, உறுதியான நாடாக உருவாக்கவதற்கு பொதுமக்களின் அர்ப்பணிப்பு அவசியமென்றும் அதிபர் சுட்டிக்காட்டினார்.