முதலமைச்சர் விருதுக்கு சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு
தமிழகத்தில் சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
15ம் தேதி சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழா நிகழ்ச்சியின்போது முதல்வர் மு. க. ஸ்டாலின் ரூ. 25 லட்சம் பரிசு மற்றும் விருது வழங்கி கவுரவிப்பார். இதுகுறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில், உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கிலும் மற்றும் அவைகளின் செயல்பாடுகளின் அடிப்படையில் அவற்றிற்கு இடையே போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கும் நோக்கிலும் முதலமைச்சரால் சிறப்பாக செயல்படும் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 3 பேரூராட்சிகளுக்கு, `முதலமைச்சர் விருதுகள்’ சுதந்திர விழாவின்போது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கீழ்க்கண்ட உள்ளாட்சிகளுக்கு முதலமைச்சர் விருதுகள் வழங்கப்படுகிறது.
அதன்படி, தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநகராட்சிக்கு ரூ. 25 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் விருது வழங்கி கவுரவிக்கப்படும்.
அதேபோன்று, சிறந்த நகராட்சியாக முதல் மூன்று நகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதல் இடம் உதகமண்டலம், 2வது இடம் திருச்செங்கோடு, 3வது இடம் சின்னமனூர் ஆகிய நகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
முதல் இடம் பிடித்த உதகமண்டலம் நகராட்சிக்கு ரூ. 15 லட்சம், 2வது இடம் பிடித்த திருச்செங்கோடு நகராட்சிக்கு ரூ. 10 லட்சம், 3வது இடம் பிடித்த சின்னமனூர் நகராட்சிக்கு ரூ. 5 லட்சம் ரொக்கம் மற்றும் விருது வழங்கப்படும்.
அடுத்து, சிறந்த பேரூராட்சியாக முதல் இடத்தில் திருச்சி மாவட்டம் கல்லக்குடி பேரூராட்சியும், 2வது இடம் கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியும், 3வது சிறந்த பேரூராட்சியாக சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் பேரூராட்சியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பேரூராட்சிகளுக்கு தலா ரூ. 10 லட்சம், ரூ. 5 லட்சம், ரூ. 3 லட்சம் ரொக்கம் மற்றும் விருது வழங்கப்படும்.
சிறந்த உள்ளாட்சி அமைப்புகளாக தேர்வு செய்யப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கு வருகிற 15ம் தேதி (ஞாயிறு) சென்னை, கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றிவைத்த பிறகு ரொக்கப்பணம் மற்றும் விருதுகள் வழங்கி கவுரவிப்பார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.