தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 100 இலங்கையர்கள்

21.09.2021 08:09:46

தூத்துக்குடி கடற்கரை வழியாக 100 க்கும் மேற்பட்ட இலங்கை பிரஜைகள் அண்மைய நாட்களில் இந்தியாவை வந்தடைந்துள்ளதாக தமிழ்நாடு கியூ பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


சட்டவிரோத குடியேற்ற மோசடியில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போதே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக தமிழ்நாடு கியூ பிரிவு காவல்துறையினரின் அறிக்கைகளை மேற்கொள்ளிட்டு இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இலங்கையர்கள் தூத்துக்குடிக்கு ஐந்து குழுக்களாக உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட படகுகளில் வருகை தந்ததாக சந்தேக நபர் கூறியுள்ளார்.


தமிழ்நாட்டை அடைந்தவர்களில் பெரும்பாலானோர் கர்நாடகாவில் உள்ள மங்களூரு வழியாக வேறு நாடுகளுக்கு சென்றுள்ளனர்.


சனிக்கிழமையன்று கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் தூத்துக்குடி பாதை வழியாக இலங்கைத் தமிழர்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடியேறுவதற்கு முக்கிய சூத்திரதாரியாக கருதப்படுகிறார்.


இந் நிலையில் தமிழகக் கடலோரப் பகுதியில் இலங்கைத் தமிழர்கள் மேலும் நாட்டுக்குள் நுழைவதைத் தடுக்கும் நோக்கில் இந்திய கடலோர காவல் படையினர் மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கடற்பரப்புகளிலும், கடலோர நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.