அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கு ஈரானில் கடும் எதிர்ப்பு.

14.06.2026 14:33:28

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் இன்று (14) கைச்சாத்திடப்படவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

 

இந்த ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையான ‘ஹோர்முஸ் நீரிணை’ சர்வதேச கப்பல் போக்குவரத்திற்காக உடனடியாகத் திறக்கப்படும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இம்முடிவிற்குப் பாகிஸ்தானும் தனது உடன்பாட்டைத் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்த அமைதி ஒப்பந்தத்திற்காக ஈரான் அரசு அமெரிக்காவிடம் பல முக்கிய விடயங்களில் சமரசம் செய்துகொண்டதாகக் குற்றம் சாட்டி, ஈரானிய மக்கள் வீதிகளில் இறங்கி கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரானின் வடகிழக்கு பிராந்தியத்திலுள்ள முக்கிய நகரான மஸ்ஸாத்தில் அமைந்துள்ள வெளியுறவு அமைச்சகத்தின் பிராந்திய அலுவலகத்தை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முற்றுகையிட்டுப் போராடி வருகின்றனர்.

இந்தத் தொடர் போராட்டத்தில் பெண்களும் பெருமளவில் பங்கேற்று, அரசாங்கத்தின் முடிவிற்கு எதிராகக் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.

அமெரிக்காவுடனான இந்த இரகசிய ஒப்பந்தத்தில் என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டன, நாட்டின் பாதுகாப்பு எந்தளவுக்குக் சமரசம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த முழுமையான வெளிப்படைத்தன்மை மக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.

 

அமெரிக்காவிடம் சரணடைந்ததாகக் கூறி, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் ஆகியோர் உடனடியாகத் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், தேசத் துரோகம் இழைத்ததாகக் கூறி அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் கடுமையான முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் தரப்பு இந்த ஒப்பந்தத்தை இன்று நிறைவேற்ற தீவிரமாக முயன்று வரும் வேளையில், ஈரானுக்குள் ஏற்பட்டுள்ள இந்த உள்நாட்டுப் புரட்சி மற்றும் அரசியல் கொந்தளிப்பு காரணமாக ஒப்பந்தம் கையெழுத்தாவதில் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாகச் சர்வதேச அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.