அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு

18.07.2022 12:24:13

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் கிரீன்வுட் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் உணவு விடுதிகள் அமைந்த பகுதியில் துப்பாக்கியுடன் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார். இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். 2 பேர் காயமடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து, சத்தம் கேட்டு அந்த பகுதிக்கு வந்த மற்றொரு நபர், சம்பவம் பற்றி அறிந்தவுடன் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து மர்ம நபரை நோக்கி சுட்டார். இதில், மர்ம நபர் உயிரிழந்து உள்ளார். இதனால் மொத்த உயிரிழப்பு 4 ஆக உள்ளது. இதனை கிரீன்வுட் காவல் துறையின் தலைவர் ஜிம் ஐசன் உறுதிப்படுத்தி உள்ளார் என தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்து உள்ளது. இதுபற்றி கிரீன்வுட் மேயர் வெளியிட்ட அறிக்கையில், கிரீன்வுட் பார்க் வணிக வளாகத்தில் பெரிய அளவில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. கிரீன்வுட் காவல் துறை சம்பவ பகுதிக்கு சென்று நிலைமையை கட்டுக்குள் வைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். போலீசாருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளேன். வேறு எந்த அச்சுறுத்தலும் இல்லை. எனினும், இந்த பகுதியில் இருந்து பொதுமக்கள் விலகி இருக்கும்படி கேட்டு கொள்கிறேன். இந்த சம்பவம் நம்முடைய சமூகத்தில் சோகம் ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்து உள்ளார்.