இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகள் இன்று ஆரம்பம்

07.03.2022 03:34:51


இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளுக்காக சகல பாடசாலைகளும் இன்றைய தினம் மீள திறக்கப்படவுள்ளன.
இதற்காக மீண்டும் மாணவர்களை குழுக்களாக பாடசாலைக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, 20 மாணவர்களை உள்ளடக்கிய வகுப்புகள் தினமும் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

21 முதல் 40 வரையில் மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட வகுப்புகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, வெவ்வேறு வாரங்களில் தனித்தனியாக அழைக்கப்படவுள்ளனர்.

அத்துடன், 40 மாணவர்களுக்கு மேல் உள்ள வகுப்புகளை 3 சம பிரிவுகளாக பிரித்து கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாடசாலைகள் மீள திறக்கப்படும் நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக மாணவர்களின் சுகாதார நலன் தொடர்பில் அதிகளவில் அக்கறை செலுத்த வேண்டும் என சிறுவர் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரோரா வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் சிறுவர்கள் மத்தியில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறைவடைந்து காணப்படுகின்றது.

எனினும், 12 வயதுக்கு குறைந்தோருக்கு தடுப்பூசி இதுவரை வழங்கப்படவில்லை என்பதால், அவர்களுக்கு வைரஸ் தொற்றுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

ஆகவே அவர்கள் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

ஏனையோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

உரிய சுகாதார வழிகாட்டுதல்களை பேணுவது தொடர்பில் மாணவர்களுக்கு பெற்றோரும், ஆசிரியரும் உரிய ஆலோசனைகளை வழங்குமாறு சிறுவர் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரோரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமது நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுத்து செல்வதற்கு எரிபொருள் விநியோகிக்கும் போது, தமக்கு முன்னுரிமை வழங்குமாறு மாகாண பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தனியார் பேருந்துகளுக்கு முன்னுரிமை வழங்குவதை போன்று தமக்கும் வழங்கப்பட வேண்டும் என அதன் தலைவர் ருவன் பிரசாத் தெரிவித்துள்ளார்.