ஆதவ் அர்ஜூன் வீட்டில் சோதனை

11.03.2024 08:01:00

சென்னை: துவரம் பருப்பு இறக்குமதியில் பல கோடி முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் பொது விநியோக திட்ட ஒப்பந்ததாரர்களான கரூரை சேர்ந்த செல்வராஜ், சென்னை வேப்பேரிதொழிலதிபர் மகாவீர் ஈரானி, கோவை சேர்ந்த தொழிலதிபர் அனீஸ், சென்னை தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள தொழிலதிபர் ஆதவ் அர்ஜூன் ஆகியோர் வீடுகள் மற்றும் அவர்கள் நடத்தும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கனடா நாட்டில் இருந்து துவரம் பருப்பு இறக்குமதி செய்ததில் பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்து தெரியவந்தது. இதையடுத்து சட்டவிரோத பணம் பரிமாற்றம் தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இந்த வழக்கை விசாரணை நடத்தியது. அதில் பொது விநியோக திட்ட ஒப்பந்ததாரார்களாக உள்ள செல்வராஜ், மகாவீர் ஈரானி, அனீஸ், ஆதவ் அர்ஜூன் உள்ளிட்டோர் துவரம் பருப்பு இறக்குமதியில் பல கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் பொது விநியோக திட்ட ஒப்பந்ததார்களாக உள்ள செல்வராஜ், மகாவீர் ஈரானி, அனீஸ், ஆதவ் அர்ஜூன் உள்ளிட்டோருக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்கள் என தமிழ்நாடு முழுவதும் 10 இடங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் பல சிக்கியதாக கூறப்படுகிறது.