தமிழ் பொது வேட்பாளர் புதன், வியாழன் முடிவு

07.08.2024 08:12:16

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிட தெரிவு செய்யப்பட்ட இரு வேட்பாளர்களில் இறுதியாக ஒருவரின் பெயரை தெரிவு செய்வதில், திங்கட்கிழமை (05) நீண்டநேரம் விவாதம் இடம்பெற்ற நிலையில் பொதுவேட்பாளர் தொடர்பான இறுதிமுடிவு  புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என தமிழ் பொதுச்சபையின் பிரதிநிதிகள் அறிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில், திங்கட்கிழமை (05) இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில்  கூடிய தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு, தமிழ் பொது வேட்பாளரை இறுதி செய்யும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டது.

தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறக்குவதற்குப் பரிந்துரைக்கப்பட்டவர்களில் இருந்து ஒருவரைத் தெரிவு செய்வதற்காக பல மணிநேரமாக தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு ஆலோசனை நடத்தியபோதும், பொதுவேட்பாளரை இறுதி செய்ய முடியவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தமிழ் பொதுவேட்பாளர் யார்? என்பது இறுதி செய்யப்பட்டு இன்னும் இரண்டொரு தினங்களில் அறிவிக்கப்படும் என்று   தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.