பாஸ்போர்ட் தரவரிசையில் பாகிஸ்தான் மிகவும் மோசம்: ஆய்வு அறிக்கை

20.07.2023 18:35:13

பாஸ்போர்ட் தரவரிசையில் பாகிஸ்தான் மிகவும் மோசம்: ஆய்வு அறிக்கை
பாகிஸ்தானுக்கு கீழ் சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளது சிங்கப்பூர் பாஸ்போர்ட் முதல் இடத்தை பிடித்துள்ளது ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் என்பது உலகின் அனைத்து அசல் பாஸ்போர்ட்டுகளில், அதனை வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் அணுகக்கூடிய இடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் பட்டியலிடப்படும் ஒரு அதிகாரப்பூர்வ தரவரிசையாகும். இந்த பட்டியல் சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் பிரத்தியேக தரவுகளின் அடிப்படையில் அமைக்கப்படுகிறது.

உலகின் 199 பாஸ்போர்ட்டுகளில் அந்த பாஸ்போர்ட்டின் உரிமையாளர்கள் முன் விசா இல்லாமல் அணுகக்கூடிய இடங்களின் எண்ணிக்கையின்படி கணக்கிடப்பட்ட 2023-க்கான ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் பட்டியல் வெளியாகியிருக்கிறது

இதன்படி பாகிஸ்தானிய பாஸ்போர்ட் 'நான்காவது மோசமானது' என்று தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை மட்டுமே பாகிஸ்தான் மிஞ்சி பட்டியலில் மேலான இடத்தில் உள்ளது. பாகிஸ்தானின் பாஸ்போர்ட் 33 மாநிலங்களுக்கு விசா இல்லாத அணுகலை அனுமதிக்கிறது. சிரியாவின் பாஸ்போர்ட் 30 இடங்களுக்கும், ஈராக் 29 இடங்களுக்கும் மற்றும் ஆப்கானிஸ்தான் 29 இடங்களுக்கும் இது போன்ற அணுகலை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குடிமக்களுக்கு 192 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலை வழங்கும் சிங்கப்பூர் இந்த பட்டியலில் முதல் இடம் பெறுகிறது.

190 இடங்களுக்கு செல்ல அனுமதிப்பதால் ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய 3 நாடுகளும் இந்த பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளன. முதல் 10 இடங்களில் உள்ள நாடுகளில், கடந்த பத்தாண்டுகளை ஒப்பிடும்போது, அமெரிக்கா தனது தரவரிசையில் மிகப்பெரிய சரிவைக் கண்டுள்ளது. 2-வது இடத்தில் இருந்த அமெரிக்கா 8-வது இடத்திற்கு விழுந்துள்ளது. 2022-ம் வருடம் இப்பட்டியலில் 85-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 80-வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. உலகின் 57 இடங்களுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் பயணிக்க முடியும். டோகோ மற்றும் செனகல் ஆகிய நாடுகளும் இந்தியாவை போல 80-வது இடத்தில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.