Monkeypox தொடர்பில் பிரித்தானிய மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை !

22.05.2022 09:56:14

பிரித்தானியாவில் அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் monkeypox பரவல் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரித்தானியாவில் இதுவரை 20 பேர்களுக்கு குரங்கம்மை உறுதி செய்யப்பட்ட நிலையில், மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவிற்கு வெளியே உள்ள நாடுகளில் 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு monkeypox உறுதிப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் monkeypox தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனிடையே, மாட்ரிட் நகரில் நீராவிக் குளியல் மேற்கொண்டவர்களில் இருந்தே நெதர்லாந்து, போர்த்துகல், ஸ்வீடன், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் குரங்கம்மை பரவியதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் Massachusetts மாகாணத்தில் முதல் பாதிப்பு உறுதி செய்த பின்னால், தற்போது நியூயார்க் நகரில் ஒருவருக்கு குரங்கம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.

குரங்குகளில் முதன்முதலில் கண்டறியப்பட்ட குரங்கம்மை தொற்று, உடலுறவு உட்பட நெருங்கிய உடல் தொடர்பு மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாலியல் சேவையில் ஈடுபடுவோரில் இருந்து இந்த தொற்று மிக அதிகமாக பரவ வாய்ப்பிருப்பதாக கவலை எழுந்துள்ளது.

அடுத்த மூன்று வாரங்களில் கண்டிப்பாக தொற்று பரவல் அதிகரிக்கும் என்றே பிரித்தானிய நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஐரோப்பாவில் இதன் பாதிப்பு அதிகமாக காணப்படுவதால், கண்டிப்பாக இதன் தாக்கம் பிரித்தானியாவிலும் இருக்கும் எனவும் மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.