தாய்வானில் சுதந்திரம் கோருபர்களுக்கு மரண தண்டனை
தாய்வானின் சுதந்திரம் குறித்து தீவிர நிலைப்பாட்டைக் கொண்டுள்ளவா்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக நீதிமன்றங்கள், சட்ட அமலாக்க அமைப்புகள் உள்ளிட்டவற்றுக்கு அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சீனாவிடமிருந்து, தாய்வானுக்கு சுதந்திரம் பெற்றுத் தரவேண்டும் என தீவிரமாக செயற்படுபவர்களுக்கு எதிராக பிரிவினைவாதச் சட்டத்தின் கீழ் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சுதந்திரம் கோரும் அமைப்புகளின் தலைவா்களுக்கு, மரண தண்டனை விதிக்கப்படும் என சீன அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஊடகவியலாளர்களிடம் பேசிய, சீன பொதுமக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சக அதிகாரி சுன் பிங், பிரிவினைவாதக் குற்றத்துக்கான அதிகபட்ச தண்டனை மரணம் ஆகும். இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை என்ற கூரிய வாளை உயா்த்திப் பிடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 1949-ஆம் ஆண்டில் முடிந்த உள்நாட்டுப் போருக்குப் பின்னர், தாய்வான் பிரதேசம் சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது.
எனினும், அந்தத் தீவை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாகவே சீனா கருதுகிறது. தாய்வானும் தன்னை தனி நாடாக இதுவரை பிரகடனப்படுத்திக்கொள்ளவில்லை.
இந்நிலையில், தாய்வானை எப்போது வேண்டுமானாலும் தங்களுடன் இணைத்துக்கொள்ளும் உரிமை தங்களுக்கு உள்ளதாக சீனா கூறிவருகின்றது.
தேவையேற்படின், இராணுவ வலிமையைக் கூட இதற்காகப் பயன்படுத்தலாம் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தச் சூழலில், தாய்வான் சுதந்திரத்தை தீவிரமாக வலியுறுத்தும் தலைவா்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.