வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல்.

03.09.2025 07:53:37

வெனிசுலா கடற்கரையை அண்டிய கடற்பரப்பில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கப்பல் மீது அமெரிக்க இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில்  11 பேர் உயிரிழந்தனர்.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவின் ஜனாதிபதியாக நிக்கோலஸ் மதுரோ மூன்றாவது முறையாக பதவி வகித்து வருகிறார்.

 

அவர், உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராக செயல்படுவதாகவும், போதைப்பொருள் கும்பல்களுடன் இணைந்து அமெரிக்காவிற்குள் போதைப் பொருட்களை விநியோகம் செய்வதாகவும் கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் வெனிசுலா கடற்கரையில் ஒரு கப்பலின் மீது அமெரிக்கப் படைகள் இராணுவத் தாக்குதல் நடத்தியதில், 11 பேர் கொல்லப்பட்டனர்.

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுடன் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல்காரர்கள், சர்வதேச கடல் வழியாக அமெரிக்காவை நோக்கிப் போதைப்பொருட்களை கொண்டு சென்றபோது அவர்களைக் குறிவைத்து இத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.