பேஜர் தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு தண்டனை
லெபனானில் பேஜர், வாக்கி டாக்கிகள் வெடித்த நிலையில் இதற்கு இஸ்ரேல்தான் காரணம் என குற்றம் சாட்டி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு இதற்கு தகுந்த தண்டனை இஸ்ரேலுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பு இடையே ஒரு ஆண்டு காலத்திற்கு மேலாக போர் நடந்து வருகிறது. இதில் காசாவை இஸ்ரேல் தொடர்ந்து தாக்கி வரும் நிலையில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனான் எல்லையில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பும் களமிறங்கியுள்ளது.
இதனால் சமீபத்தில் இஸ்ரேல் - லெபனான் எல்லையில் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் வடக்கு இஸ்ரேல் பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் உளவு அமைப்புகள் தங்கள் தகவல் தொடர்பை ஒட்டுக்கேட்பதை தவிர்க்க ஹிஸ்புல்லா அமைப்பினர் பேஜர்களை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில நாட்கள் முன்னதாக பேஜர்கள், வாக்கி டாக்கிகள் மொத்தமாக திடீரென வெடித்ததில் பலர் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து போரின் மையம் வடக்கு நோக்கி நகர்வதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தத
இதற்கு பதிலளித்து பேசியுள்ள ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் ஹஸ்ரல்லா “பேஜர், வாக்கி டாக்கி தாக்குதலுக்கு தண்டனை வழங்கப்படும். இந்த தாக்குதல் ஒரு இனப்படுகொலையாகும். இது ஒரு போர் குற்றம் அல்லது போர் அறிவிப்பு. இஸ்ரேல் 2 நிமிடத்தில் 5 ஆயிரம் மக்களை கொல்ல விரும்பியது. காசா மீதான தாக்குதலை நிறுத்தாத வரை இஸ்ரேலால் வடக்கு பகுதியில் மீண்டும் மக்களை குடியமர்த்த முடியாது” என கூறியுள்ளார்.
ஹிஸ்புல்லா - இஸ்ரேல் இடையே வளர்ந்து வரும் இந்த தாக்குதலால் லெபனான் எல்லைகளில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.