வி.சி.க.வை கண்டித்து பா.ம.க.வினர் போராட்டம்!
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பி.உடையூரில் இரு சமுக இளைஞர்கள் மது போதையில் தாக்கிக் கொண்டதில் மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த செல்லதுரை என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தைக் கண்டித்து பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மஞ்சக்கொல்லை கிராமத்தில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பத்தைப் பெண்மணி ஒருவர் கடப்பாரையால் சேதப்படுத்தினர். |
இந்த சம்பவத்தைக் கண்டித்து புவனகிரியில் கடந்த திங்கட்கிழமை விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தரக்குறைவாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தெற்கு மாவட்டம் சார்பில் புவனகிரியில் (06.11.2024) போராட்டம் நடைபெற்றது. இதில் வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி, கடலூர் தெற்கு மாவட்ட பாமக செயலாளர் செல்வ மகேஷ் உள்ளிட்ட பாமகவினர் திரளாகக் கலந்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனக் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் காவல்துறையினர் வஜ்ரா வாகனம், அதிரடிப் படையினர் எனப் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் பாமகவினரைக் கொலை மிரட்டல் விடுத்துப் பேசிய கட்சியின் மகளிர் அணி நிர்வாகி செல்வியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் |