செப்ரெம்பர் 11 தாக்குதல் ஆவணங்களை வகைப்படுத்த ஜோ பைடன் உத்தரவு

05.09.2021 11:00:00

அமெரிக்காவில் 2001 செப்., 11ல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பான ரகசிய ஆவணங்களை வகைப்படுத்த அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன் உள்ளிட்ட நகரங்களில் 2001, செப்., 11ல் தாக்குதல் நடத்தப்பட்டது. ஒசாமா பின் லேடன் தலைமையிலான அல் - குவைதா பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியது.'தாக்குதல்களில் ஈடுபட்ட 15 பேரும் மேற்காசிய நாடான சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள். அதனால் சவுதி அரேபியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தாக்குதலில் பாதிக்கப்பட்டோர் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி சில அமைப்பினர் அமெரிக்காவில் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். தாக்குதலின் 20வது ஆண்டையொட்டி நடக்கும் நிகழ்ச்சிகளில்,அதிபர் ஜோ பைடன் பங்கேற்க கூடாது என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து செப்., 11 தாக்குதல் தொடர்பான ஆவணங்களை வகைப்படுத்த, ஜோ பைடன் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அடுத்த ஆறு மாதங்களுக்குள் இந்தப் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.