மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம்.

11.07.2026 14:39:36

சென்னை உயர்நீதிமன்றத்தில் வனவிலங்குகள், சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்குப் பசுமை அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வில் வனவிலங்கு, வனத்துறை, வன பாதுகாப்பு தொடர்பான வழக்கில், “டாஸ்மாக் கடைகளில் மதுப்பாட்டில்களுடன் மலைப் பிரதேசத்திற்குச் செல்லக்கூடியவர்கள் அங்கு வீசி எரிகின்றனர். இதனால் வன விலங்குகளுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. வன விலங்களின் காலில் பாட்டில்கள் குத்துவதால் பாதிப்பு ஏற்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.

    

 

இந்த வழக்கில் உயர் நீதிமன்றம், “மலைப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யக்கூடிய மதுபாட்டில்களுடன் கூடுதலாக 10 ரூபாய் வாங்கி வாங்கலாம். அதன் பின்னர் காலிப்பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது 10 ரூபாயைத் திருப்பி கொடுத்துவிடலாம்” எனத் தெரிவித்தது. அதன் அடிப்படையில் இந்த திட்டத்தை அமல்படுத்துவதாகத் தமிழக அரசு ஒப்புக்கொண்டது. அதன்படி, பயன்படுத்தப்பட்ட காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப்பெறும் திட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் நீலகிரி மாவட்டத்தில் முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்பட்டது.

இதனையடுத்து சென்னை, திருநெல்வேலி, விருதுநகர் நீங்கலாகத் தமிழ்நாட்டின் பிற அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக டாஸ்மாக் பணியாளர்களிடமிருந்துப் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ். சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாற்றி அமைக்க புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.

மேலும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் கூடுதல் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், “மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்தும் வகையில், ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக ரூ. 10 தனியாக வசூலிப்பதற்குப் பதிலாக, அந்தத் தொகையை மதுபானத்தின் அதிகபட்ச சில்லறை விலையுடன் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாட்டில்களை திரும்பப் பெறுதல், மறுசுழற்சி செய்தல் உள்ளிட்ட பொறுப்புகளை சம்பந்தப்பட்ட மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உரிய சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபானங்களின் அதிகபட்ச விற்பனை விலையுடன் கூடுதலாக ரூ. 10 செஸ் வரி விதிப்பது தொடர்பாக, வணிக வரித்துறை ஆணையர் அரசுக்கு பரிந்துரைக் கருத்துரு ஒன்றை அனுப்பியுள்ளார். எனவே, இதுதொடர்பாக மதிப்புக் கூட்டு வரி சட்ட விதிகளில் திருத்தம் செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதற்குள் தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.