வரும் 16ல் இரண்டாம் சுற்று, சம்பள பேச்சு முன்னேற்றம்! பனியன் உற்பத்தியாளர் சங்கங்கள்

10.08.2021 08:23:29

பனியன் உற்பத்தியாளர் சங்கம் - தொழிற்சங்கங்கள் இடையே, இரண்டாம் சுற்று சம்பள பேச்சுவார்த்தை, வரும்16ல் நடைபெற உள்ளது.திருப்பூரில், பனியன் உற்பத்தியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கு வதற்கான ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில், ஆறு பனியன் உற்பத்தியாளர் சங்க மற்றும் எட்டு தொழிற் சங்க நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இருதரப்பினரும், கடந்த 4ம் தேதி, முதல் சுற்று பேச்சு நடத்தினர்.

இதில், தொழிற்சங்க தரப்பினர், 90 சதவீத சம்பள உயர்வு, 15 ஆயிரத்துக்கு மேல் உயரும் ஒவ்வொரு விலைவாசி புள்ளிக்கும், 30 பைசா பஞ்சப்படி கேட்கின்றனர். 24 சதவீத சம்பள உயர்வு; 14.5 பைசா பஞ்சப்படி உயர்வு வழங்க, உற்பத்தியாளர் சங்கங்கள், முதல் சுற்று பேச்சில் சம்மதம் தெரிவித்தன.அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து, உற்பத்தியாளர் சங்கங்கள் நேற்று ஆலோசனை நடத்தினர்.

'சைமா' சங்க அரங்கில் நடந்த கூட்டத்தில், சங்க தலைவர் ஈஸ்வரன், பொதுச்செயலாளர் பொன்னுசாமி, துணை தலைவர் கோவிந்தப்பன், ஏற்றுமதியாளர் சங்க ராஜாசண்முகம், துணை தலைவர் வேலுசாமி, இணை செயலாளர் செந்தில்குமார், 'நிட்மா' தலைவர் ரத்தினசாமி, செயலாளர் ராஜாமணி, உறுப்பினர் பழனிசாமி, 'டீமா' தலைவர் முத்துரத்தினம், செயலாளர் செந்தில், 'சிம்கா' பொருளாளர் கோபாலகிருஷ்ணன், 'டெக்மா' தலைவர் கிருஷ்ணன் பங்கேற்றனர்.ஒப்புதல் பெற்று...'வரும் 16ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, பனியன் தொழிற்சங்கங்களுடன், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

பேச்சுவார்த்தை குழு தலைவர் துரைசாமியிடம் (ஏற்றுமதியாளர் சங்கம்) ஒப்புதல் பெற்று, தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்புவது,' என முடிவு செய்யப்பட்டது.தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தையில், எத்தனை சதவீத சம்பள உயர்வு, பஞ்சப்படி உயர்வு வரை சம்மதிக்கலாம்; தொழிற்சங்கங்களின் இதர கோரிக்கைகள் குறித்தும், நேற்றைய ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.அதனடிப்படையில், இரண்டாம் சுற்றில், உற்பத்தியாளர் சங்கத்தினர், கருத்துக்களை முன்வைத்து பேச உள்ளனர்.