
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு நான்கு அம்சக் கோரிக்கை!
இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் தூதரகத் தலைவர்களுக்கு இலங்கை தமிழரசுக் கட்சி நான்கு அம்சங்கள் அடங்கிய கடிதத்தை அனுப்பியுள்ளது.
2024ஆம் ஆண்டு 57வது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 57/1 தீர்மானம் வரும் செப்டெம்பர் மாதம் காலாவதியாக இருப்பதை குறிப்பிட்டுள்ள இல.த.க., தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக சில முக்கியமான கவலைகளை முன்வைப்பது கட்சியின் கடமை என தெரிவித்துள்ளது.
அக் கடிதத்தில், யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பதை உறுப்பு நாடுகள் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், சர்வதேச மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றோடு இனப்படுகொலை மற்றும் அதற்கான நோக்கத்தை சுட்டும் ஆதாரங்களை சேகரிப்பதும் பொறுப்புக்கூறல் திட்டத்தின் ஓர் அங்கமாக விரிவுபடுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், ரோம் சட்டத்தில் கையெழுத்திட்டு அங்கீகரிக்க இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், மீண்டும் நிகழாமல் தடுக்க தமிழ் மக்களுடன் புதிய அரசியலமைப்பிற்கான உரையாடலை தொடங்கி, வடக்கு – கிழக்கில் விரிவான அதிகாரப்பகிர்வுடன் கூடிய சமஷ்டி அரசியலமைப்பை இயற்ற வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
உடனடி நடவடிக்கையாக, மாகாண சபைத் தேர்தல்களை மேலும் தாமதமின்றி நடத்துவதற்கான வற்புறுத்தலையும் தமிழரசுக் கட்சி தனது கடிதத்தில் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.