எப்ஸ்டீன் கோப்பில் இந்திய அமைச்சரின் பெயர்.

21.11.2025 16:28:24

எப்ஸ்டீன் கோப்பில் இந்திய அமைச்சரின் பெயர் இடம் பெற்றுள்ளது குறித்து பாஜக விளக்கமளித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பெரும் பணக்காரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீது, இளம் சிறுமிகளை தனது தீவுக்கு கடத்தி முக்கிய புள்ளிகளுடன் கட்டாயப்படுத்தி, பாலியல் தேவைக்காக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட எப்ஸ்டீன் கடந்த 2019 ஆம் ஆண்டு சிறையில் தனது உயிரை மாய்துகொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், இவரது மரணத்தில் பலரும் சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர்.

    

 

இவரின்மறைவிற்கு பின்னர், அந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சீலிடப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் எப்ஸ்டீன் கோப்புகள்(epstein files) என அழைக்கப்படுகிறது. பல முக்கிய பிரமுகர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதே இந்த கோப்புகள் வெளியாகாததற்கு காரணம் என கருதப்படுகிறது.

சமீபத்தில், பிரித்தானிய மன்னரான சார்லசின் தம்பி இளவரசர் ஆண்ட்ரூ, இந்த சர்ச்சையின் காரணமாக அவரது யார்க் கோமகன் (Duke of York) என்ற பட்டம் பறிக்கப்பட்டது.

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப்பிற்கு எப்ஸ்டீன் நண்பர் என்பதால், அமெரிக்க அரசியலில் இந்த விவகாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்நிலையில், எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிடுவை அனுமதிக்கும் மசோதாவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.

எப்ஸ்டீனின் மின்னஞ்சல் உரையாடல் ஒன்றில், இந்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் பெயர் இடம்பெற்றுள்ளது இந்திய அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பாஜக தகவல் மற்றும் தொழில்நுட்பப் பொறுப்பாளர் அமித் மாளவியா விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அந்த மின்னஞ்சலை முழுவதுமாக படியுங்கள். யாருக்கும் பெண்கள் வழங்கப்படுவதைப் பற்றிய எந்த குறிப்பும் இல்லை, அந்த உரையாடலும் அந்த நோக்கில் இல்லை.

எப்ஸ்டீன், ஒபாமா நிர்வாகத்தில் அப்போது வெள்ளை மாளிகை ஆலோசகராக இருந்த கேத்ரின் ரூம்லருக்கு எழுதுகிறார். "பெண்களைப் பற்றி எனக்கு நினைவூட்டாதே (அது என் பழைய கெட்ட பழக்கம்)" என்று கூறுகிறார், ஏனெனில் இந்த வாரம் "நியூயார்க்கில் மிகவும் பிஸியாக" உள்ளது,

"உலகம் முழுவதிலுமிருந்து பல பெரிய மனிதர்கள்" காலநிலை மாநாட்டிற்காக நகரத்தில் உள்ளனர்" "உலகம் முழுவதிலுமிருந்து மக்கள்" நகரத்தில் இருப்பதைக் காட்டுவதற்காக, ஐநாவுக்கான இந்தியாவின் அப்போதைய தூதரைக் குறிக்கும் அந்த மின்னஞ்சலே எழுத்துப் பிழைகள், சீரற்ற பெயர் விடுப்புகள் மற்றும் உடைந்த இலக்கணத்தால் நிறைந்துள்ளது." என தெரிவித்துள்ளார்.

ஹர்தீப் சிங் பூரி தவிர்த்து இந்த பட்டியலில், டொனால்ட் டிரம்ப், டிரம்பின் முன்னாள் மனைவி மார்லா மேப்பிள்ஸ், அவரது மகள்டிஃப்பனி டிரம்ப், முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன், ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர், எலான் மஸ்க், கூகிள் நிறுவனர் லாரி பேஜ் மைக்கேல் ஜாக்சன், லியோனார்டோ டிகாப்ரியோ, கோர்ட்னி லவ், நவோமி கேம்பல், ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரின் பெயரும் இடம்பெறுள்ளது.