பெண்கள் தெருவில் இனி நடக்க முடியாது

28.08.2021 11:14:45

''எங்களின் ஆட்சியில் பெண்களுக்கு ஷரியத் சட்டத்தின்படி உரிமை கொடுப்போம்'' என்று தாலிபான்கள் கூறி வந்தாலும் தாலிபான்களின் கடந்த கால வரலாறை மனதில் நிறுத்தி அங்கு இருந்து தொடர்ந்து வெளியேறும் ஆப்கானியர்கள் பல்வேறு நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்த நிலையில் தாலிபான்கள் ஊடகங்களை முற்றிலுமாக மூடிவிடுவார்கள் என்று ஆப்கானிய புகைப்படக் கலைஞர் மசூத் ஹொசைனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏஜென்ஸ் ஃபிரான்ஸ்-பிரஸ்ஸில் பணிபுரிந்து 2012 இல் புலிட்சர் பரிசு பெற்ற மசூத் ஹொசைனி, இப்போது ஃப்ரீலான்ஸாக இருக்கிறார். தலிபான்கள் ஆட்சிக்கு வந்த நாளில் விமானம் மூலம் அங்கு இருந்து தப்பினார்.தற்போது நெதர்லாந்தில் தங்கியிருக்கும் ஹொசைனி தாலிபன்களின் அடக்குமுறை குறித்து மேலும் கூறியதாவது:- தாலிபான்கள் ஊடகங்களை முற்றிலுமாக மூடிவிடுவார்கள். அவர்கள் இணையத்தை முற்றிலுமாக துண்டித்து அநேகமாக இந்த பிராந்தியத்திற்கான மற்றொரு வட கொரியாவாக ஆப்கானை மாற்றி விடுவார்கள்.


தாலிபான்கள் ஊடகவியலார் ஒருவரைப் பிடிக்கும்போது அவரை கொன்று விடுகிறார்கள். இப்போது இது பொதுவாக ஊடகங்களுக்கு நடந்து வருகிறது. பெண்களுக்கு உரிமை கொடுப்போம். ஊடக சுதந்திரம் இருக்கும் என்று கூறி தாலிபான்கள் சர்வதேச சமூகத்தை முட்டாளாக்குகிறார்கள்; மேற்கத்தியர்களை முட்டாளாக்குகிறார்கள். நிச்சயமாக எந்த பெண்ணும் தெருவில் நடக்க முடியாது, பெண் ஊடகவியலாளர்கள் மைக்ரோஃபோனுடன் செல்வதை நாம் பார்தோம். ஆனால் இனிமேல் அது சாத்தியமில்லை.