நிலக்கரி பயன்பாட்டை குறைக்க கிளாஸ்கோ மாநாட்டில் ஒப்பந்தம்

15.11.2021 08:57:05

பருவ நிலை மாறுபாடு பிரச்னையை எதிர்கொள்ளும் வகையில், நிலக்கரி மற்றும் பூமியில் இருந்து எடுக்கப்படும் எரிபொருள் பயன்பாட்டை முற்றிலுமாக கைவிடுவதை தவிர்த்து, படிப்படியாக குறைத்துக் கொள்வதற்கு, கிளாஸ்கோ மாநாட்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

பருவ நிலை மாறுபாடு தொடர்பாக, ஐ.நா.,வின் சி.ஓ.பி., - 26 எனப்படும் மாநாடு, ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வந்தது. கடந்த மாதம் 31ம் தேதி துவங்கிய இந்த மாநாடு, 12ம் தேதி முடிவடைவதாக இருந்தது. பருவ நிலை மாறுபாடு பிரச்னையை சமாளிக்க, புவி வெப்பமடைவதை 1.5 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு குறைக்க, உலக நாடுகள் உறுதி ஏற்றன.இதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக 200க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தி வந்தனர். இறுதி முடிவு எடுக்கப்படாததால், மாநாடு ஒரு நாள் நீட்டிக்கப்பட்டது.அதன் இறுதியில் இந்தியா வலியுறுத்தியது போல், நிலக்கரி மற்றும் நிலத்தடி எரிபொருள்கள் பயன்பாட்டை உடனடியாக முற்றிலுமாக கைவிடுவதை தவிர்த்து, படிப்படியாக குறைத்துக் கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

பாரிஸ் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து பருவ நிலை மாறுபாடு பிரச்னையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க, முதல் முயற்சி இதன் வாயிலாக எடுக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.இந்த மாநாட்டில் பங்கேற்ற, நம் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் பேசியதாவது:இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில், வளர்ச்சிப் பணிகள் அதிகம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. மேலும், வறுமையை ஒழிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்.

இந்நிலையில், எரிபொருள்களுக்கான மானியங்களை முழுமையாக ரத்து செய்வது சாத்தியமில்லை. உதாரணமாக சமையல் 'காஸ்' சிலிண்டருக்கான மானியம் வழங்குவதால் தான், விறகுகள் எரிப்பதால் ஏற்படும் புகையை கட்டுப்படுத்தியுள்ளோம்.நிலக்கரி மற்றும் நிலத்தடி எரிபொருள்களை முற்றிலுமாக திடீரென நிறுத்துவது சாத்தியமில்லை. அதனால், படிப்படியாக அவற்றின் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்கலாம்.இவ்வாறு அவர் பேசினார்.