’பயங்கரவாதிகள் பட்டியலில் இணைக்கவும்’

12.07.2024 08:22:29

அப்பாவி மக்களை பணயக் கைதிகளாக்கி தமது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கும் ஜோசப் ஸ்டாலின் உட்பட புகையிரத தொழிற்சங்க தலைவர்களை பயங்கரவாதிகள் பட்டியலில் இணைக்க வேண்டும் என மின்சக்தி  மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11)   இடம்பெற்ற சட்டரீதியான ஏற்பாடுகளுக்கு அமைய உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது பற்றிய ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
 
பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து தொழிற்சங்கத்தினர் தற்போது முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பினால் தேர்தல் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படும்.பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கும்  பணிப்புறக்கணிப்பின் பின்னணியில்  குறுகிய நோக்கங்களே காணப்படுகின்றன.

தொழிற்சங்க போராட்டங்களினால்  தேசிய பொருளாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விசேட கவனம் செலுத்த  வேண்டும்.தொழிற்சங்கத்தினரது நியாயமற்ற கோரிக்கைகள் தொடர்பில் நாட்டு மக்கள் தெரிந்து  கொள்ள வேண்டும்.முறையற்ற வகையில் மக்களை பணயக் கைதிகளாக்கி போராட்டங்களில் ஈடுபடுபவர்களை பயங்கரவாதிகள் பட்டியலில் இணைக்க வேண்டும்  ன்.அரசியல் நோக்கத்துடன் செயற்படும் இவர்கள் பயங்கரவாதிகள் போல் செயற்படுகிறார்கள்.

  வெற்றிடங்களுக்கு நியமனம் வழங்குமாறு கோரிக்கைளை முன்வைத்து புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள்  பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகிறார்கள்.சேவையில் இருப்பவர்களுக்கு சம்பளம் வழங்குவது பெரும் போராட்டமாக உள்ள நிலையில் எவ்வாறு புதிய நியமனங்களை வழங்க முடியும்?

  ஆசிரியர் தொழிற்சங்கவாதியான ஜோசப் ஸ்டாலின்   நடுத்தர மக்களையும்,மாணவர்களையும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார். இவரை பயங்கரவாதி என்றே குறிப்பிட வேண்டும்.புகையிரத சேவை உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவை அத்தியாவசிய சேவையாக அறிவித்துள்ள நிலையில் அதற்கு எதிராகவே தொழிற்சங்கத்தினர் செயற்படுகிறார்கள்.இவர்களுக்கு  எதிராக கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும். இல்லாது விட்டால் நாடு  என்ற ரீதியில் ஒருபோதும் எம்மால் முன்னேற முடியாது என்றார்.