2 வருடங்களுக்கு பிறகு திரையில் அதர்வா

31.07.2021 15:12:47

2019ம் ஆண்டு மே மாதம் வெளிவந்த 100 என்ற படம்தான் அதர்வா நடித்து கடைசியாக வெளிவந்த படம். இந்த படத்திற்கு முன்பு சில தோல்விகளை சந்தித்திருந்த அதர்வாவுக்கு இந்த படம் ஆறுதலாக அமைந்தது. அதற்கு பிறகு அவர் நடித்த குருதி ஆட்டம், தள்ளிப் போகாதே, ஒத்தைக்கு ஒத்த, அட்ரஸ் படங்கள் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் வெளிவரவில்லை.

தற்போது வருகிற 6ந் தேதி ஒடிடி தளத்தில் வெளிவரும் அந்தாலஜி திரைப்படமான நவரசாவில் துணிந்த பின் என்ற கதையில் நடித்துள்ளார். இதனை அறிமுக இயக்குனர் சர்ஜுன் இயக்கி உள்ளார். 2 வருடங்களுக்கு பிறகு அதர்வா தற்போது தான் திரையில் தோன்றுகிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: இயக்குநர் சர்ஜுன் இந்த படத்தின் திரைக்கதையை பற்றி விவரிக்கும் போது, எந்த உணர்வை பற்றிய கதையை சொல்லப்போகிறார், என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தேன். இந்தப் படம் துணிச்சலை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ளது என்று அவர் விவரித்த பின்னர், என் மனம் சந்தோஷத்தின் உச்சிக்கு சென்றது.

நான் ஸ்பெஷல் டாஸ்க் போர்சில் உள்ள ஒரு சிறப்பு அதிகாரியாக நடித்திருக்கிறேன். இந்தப்படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இயக்குநர் சர்ஜுன் உடன் பணி புரிந்தது மற்றும் வெற்றி என்ற கதாபாத்திரத்தை செய்தது மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது. இதுவரை பார்க்காத இன்னொரு அதர்வாவை இதில் பார்க்கலாம். என்றார்.