கேரளாவில் முதல்முறையாக பத்மநாபசுவாமி கோவில் யானைக்கு மணிமண்டபம்

17.07.2021 10:54:24

பக்தர்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற யானை மதிலகம் தர்சினிக்கு மணிமண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. உலக பணக்கார கோவில்களில் ஒன்றாக கருதப்படும் இந்த கோவிலில் மதிலகம் தர்சினி என்ற பெண் யானை இருந்தது.

பத்மநாபசுவாமி கோவிலில் நடக்கும் திருவிழாக்கள் மற்றும் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த யானை கடந்த மே மாதம் 29-ந்தேதி நோய்வாய்ப்பட்டு இறந்தது. இதையடுத்து அந்த யானை கோவில் வளாகத்திலேயே ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

யானை மதிலகம் தர்சினி திடீரென இறந்தது. பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவர்கள் கவலை அடைந்தனர். பக்தர்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற யானை மதிலகம் தர்சினிக்கு மணிமண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

மணிமண்டபம் கட்டும் பணி சிற்பி சூரஜ் நம்பியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பத்மநாபசுவாமி கோவில் வளாகத்தில் சித்திரைதிருநாள் மகாராஜா மணிமண்டபம் அருகிலேயே யானைக்கு மணிமண்டபம் கட்டப்பட்டது. ரூ.2½ லட்சம் செலவில் கட்டப்பட்ட மணிமண்டப பணிகள் முடிவடைந்து நேற்று திறக்கப்பட்டது.

கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் மணிமண்டபம் திறக்கப்பட்டது. அதில் “அனந்தபுரியின் கெட்டிலம்மா மதிலகம் தரிசினி” என்று பெயர் எழுதப்பட்டுள்ளது.

கோவில் யானை ஒன்றுக்கு மணிமண்டபம் கட்டியிருப்பது கேரளாவில் இதுதான் முதல்முறையாகும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதனை வணங்கி செல்கின்றனர்.