பாகிஸ்தானில் தடுப்பூசி போடாதவர்களுக்கு தீவிர கட்டுப்பாடு
‛'கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், அலுவலகங்களுக்கு வந்து பணியாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள்,'' என, பாகிஸ்தான் திட்டமிடல் துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் திட்டமிடல் துறை அமைச்சர் ஆசாத் உமர் நேற்று (செப்., 14) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது: நாட்டில் தினசரி கோவிட் தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும், பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். தலைநகர் இஸ்லாமாபாத்தில் மட்டும் 52 சதவீதம் பெரியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. மற்ற பகுதிகளில் மிகக் குறைவாகவே தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
தடுப்பூசிகள் குறித்துப் பரவிய வதந்திகளால் பலரும் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். கோவிட் பெருந்தொற்று பரவலைத் தடுக்கவும், தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கவும் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம். எனவே, அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் வணிக வளாகங்களுக்குள் நுழையவும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்படும். அலுவலகங்களுக்கு வந்து பணியாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.