’3 சந்தர்ப்பங்களிலும் ரணில் கைவிடவில்லை’
போராட்டத்தின் மூலம் வன்முறையை உருவாக்கிய ஒரு தலைவரால் இந்த நாட்டைப் பொறுப்பேற்க முடியாது என தெரிவித்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அப்படியொரு தலைவரை நியமித்தால் இந்த நாடு பங்களாதேஷை விட மோசமான நிலைக்கு தள்ளப்படும் என்று கூறினார்.
கம்பஹா மாவட்டத்தின் தொம்பே தேர்தல் தொகுதியில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரசார கூட்டத்தில் நேற்று முன்தினம் (01) உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, “இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 39 வேட்பாளர்களில் ஏழு முன்னாள் அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் உள்ளனர். அவர்கள் யாரும் அந்த சவாலை ஏற்கவில்லை. அந்த சவாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டுமே ஏற்றுக்கொண்டார்.
ரணசிங்க பிரேமதாச காலமான போது நாட்டு மக்களுக்காக பிரதமர் பதவியை ரணில் ஏற்றார். 1999 இல் இந்த நாடு எதிர்மறையான பொருளாதாரத்திற்கு சென்ற போது, அவர் இந்த நாட்டை பொருளாதார ரீதியாக பலப்படுத்த பாடுபட்டார்.
மேலும், 2022 இல், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நிலையில், எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்காக வரிசைகள் இருந்தன. எங்களிடம் தேவையான மருந்து இருக்கவில்லை. அப்போது இந்நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்று கூறி பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
இந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் அவர் இந்நாட்டு மக்களுக்கு நியாயத்தை வழங்கினார். ரணில் விக்கிரமசிங்க, சவால்களை வெற்றிகொள்ளும் ஒரு தலைவராக தம்மை நிரூபித்துக் கொண்டு இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
எமது அரசாங்கத்தில் விவசாய அமைச்சராக அநுரகுமார திஸாநாயக்க மிகவும் தோல்வியடைந்த அமைச்சராக வரலாற்றில் இடம்பிடித்தார். 88/89 காலத்தில் வீடுகளில் தங்கப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அடையாள அட்டைகள் எடுக்கப்பட்டன. 2022 அரகலயின் போது வீடுகளுக்குச் சென்று அநுரகுமாரவின் ஹெல்மெட் கும்பல் பெறுமதியான பொருட்களை எடுத்துச் சென்றது. அத்தகைய தலைவரால் இந்த நாட்டைப் பொறுப்பேற்க முடியாது.
இன்று பங்களாதேஷுக்கு என்ன நடந்தது என்று பாருங்கள். அந்த நாட்டில் இன்றும் வன்முறைகள் தொடர்கின்றன.
தங்கள் கருத்தை மதிக்காதவர்கள் தெருவில் அடித்துக் கொல்லப்படுகிறார்கள். பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் கருத்தை ஏற்கவில்லை என்றால், அவர்கள் அவர்களை பல்கலைக்கழக கட்டிடங்களுக்கு வெளியே இழுத்து கொலை செய்கிறார்கள்.
அதுதான் நம் நாட்டின் தலைவிதியும். ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டைப் பொறுப்பேற்றதால் அந்த விதி பறிபோனது. இவ்வாறானதொரு நிலைமைக்கு இடமளிக்காமல் இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியவர் ரணில் விக்கிரமசிங்க என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.” என்றார்.