பைடன் – டிரம்ப் மோதல் உறுதி: 70 ஆண்டுக்கு பின் மறுபோட்டி
வாஷிங்டன்: அமெரிக்காவில் அடுத்த அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி வேட்பாளர்கள் போட்டியில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து இந்திய வம்சாவளிகளான நிக்கி ஹாலே, விவேக் ராமசாமி உள்ளிட்டோர் களமிறங்கினர். ஆனால் கட்சியில் போதிய ஆதரவு கிடைக்காத நிலையில் ஹாலே, ராமசாமி ஆகியோர் போட்டியிலிருந்து விலகினார். இந்நிலையில், வாஷிங்டன் மாகாணத்தில் வேட்பாளர் தேர்வுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில், 77 வயதாகும் டிரம்ப் குடியரசு கட்சி வேட்பாளராக தேர்வாக தேவையான 1,215 கட்சி பிரதிநிதிகளின் ஆதரவை எட்டினார். முன்னதாக, ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் ஜார்ஜியா மாகாண தேர்தல் மூலம், கட்சி வேட்பாளர் ஆவதற்கான 1,968 பிரதிநிதிகளின் ஆதரவை எட்டினார்.
இதன் மூலம், வரும் நவம்பரில் நடக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் ஜோ பைடன் – டெனால்ட் டிரம்ப் மோத இருப்பது உறுதியாகி உள்ளது. வரும் ஜூலையில் நடக்கும் மில்வாக்கியில் நடக்கும் குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில் டிரம்ப் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார். 1956ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக அதிபர் தேர்தலில் இரு தலைவர்களின் மறுபோட்டி நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலுக்கு இன்னும் 9 மாதம் இருக்கும் நிலையில், வேட்பாளர்கள் தற்போதே உறுதியாகி இருப்பதால் நீண்டகால பிரசாரம் நடப்பதும் உறுதியாகி உள்ளது.