பங்களாதேஷ் நாடாளுமன்ற உறுப்பினர் கொலை
கொல்கத்தா: கொல்கத்தாவுக்கு சிகிச்சைக்காக சென்ற பங்களாதேஷ் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது அன்வருல் அசீம் அன்வர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பங்களாதேஷ் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வருல் அசீம். அவாமி கட்சியைச் சேர்ந்தவர். இவர் கடந்த 12-ம்தேதி மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தா சென்றார்
இந்நிலையில் கடந்த 14-ம் தேதி முதல் அவரைக் காணவில்லை. எம்.பி.யான அன்வருல் அசீமை தொடர்பு கொள்ள இயலாத நிலையில் அவரது கையடக்க தொலைபேசியை தொடர்புகொள்ள முடியாத நிலை காணப்பட்டது
இதையடுத்து கொல்கத்தா போலீஸார் வழக்குப் பதிவுசெய்து காணாமல் போன அன்வருல் அசீமை தேடி வந்தனர். இந்நிலையில்கொல்கத்தா நியூ டவுன் பகுதியில் அன்வருல் அசீம்நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இத்தகவலை மேற்கு வங்க சிஐடி போலீஸார் உறுதி செய்துள்ளனர். இதுதொடர்பாக படுகொலை வழக்கு மாநில சிஐடி போலீஸாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிஐடி போலீஸ் ஐஜி அகிலேஷ் சதுர்வேதி கூறியதாவது: வங்கதேச எம்பி அன்வருல் அசீம்இ கொல்கத்தாவுக்கு சிகிச்சைக்காக வருவது எங்களுக்கு முன்கூட்டியே தெரியாது. இந்நிலையில் கொல்கத்தாவிலுள்ள அவரது நண்பர் கோபால் பிஸ்வாஸ் மூலம் அவர் இங்கு வந்தது தெரியவந்தது. இதனிடையே 14-ம் தேதி முதல் அவரைக் காணவில்லை என்று எங்களுக்குத் தகவல் வந்தது. இதுதொடர்பாக கடந்த 18-ம் தேதி அன்வருல் அசீம் மாயமானதாக வழக்குப் பதிவு செய்து தேடி வந்தோம்.
இதற்காக பாரக்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் மூலம் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நியூ டவுன் பகுதியிலுள்ள குடியிருப்பில் அன்வருல் அசீம் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். முதல்கட்ட விசாரணையில் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. அவரது உடலை நாங்கள் இன்னும் கைப்பற்றவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எம்.பி. படுகொலை தொடர்பாக வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுசமான் கான் கூறும்போது “கொல்கத்தாவிலுள்ள வீட்டில் அன்வருல் அசீம் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக இந்தியா வங்கதேசப் போலீஸார் இணைந்து இந்த வழக்கில் புலனாய்வு செய்து வருகின்றனர். அவர் படுகொலை செய்யப்பட்டதற்கான காரணம் விரைவில் கண்டறியப்படும்.